விமானத்தில் பயணிகளின் உடைமைகள் வைக்கப் பயன்படுத்தப்படும் பெட்டியிலிருந்து சரியாக மூடப்படாத சிங்கப்பூர்ப் பயணி ஒருவரின் பையிலிருந்த கடன் அட்டையை ஒருவர் களவாடினார்.
விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே அந்தக் கடன் அட்டையைப் பயன்படுத்தி $10,000 மதிப்புள்ள பொருள்களை அவர் வாங்கியதாகக் கூறப்பட்டது.
பாதிக்கப்பட்டவர் தனது அட்டை காணாமற்போனதைக் கண்டறிவதற்குள் அந்த மோசடிப்பேர்வழி அதனைப் பயன்படுத்தி 20 பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
இச்சம்பவம் நமக்குப் பயணம் செய்யும்போது கடன் அட்டைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதையும் உடைமைகளை நம்பகமான பூட்டுகளால் பூட்டி, அவற்றைப் பாதுகாக்க வேண்டும் எனும் பாடத்தையும் கற்றுத்தந்துள்ளது.
நம் கடன் அட்டை களவாடப்பட்டது என்பதை நாம் அறிவதற்குள் மோசடிக்காரர்கள் அவற்றைப் பயன்படுத்திவிடுவர்.
உங்கள் உடைமைகளைக் கவனித்துக்கொள்வதில் நீங்கள் அலட்சியமாக இருந்தால் இதுபோன்ற இழப்புகளை நீங்கள் சந்திக்கவேண்டியிருக்கும்.
உங்களுடைய கவனமின்மைக்கு வங்கிகள் பொறுப்பேற்காது. அதேபோன்று மோசடிகள் குறித்து உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும். நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் உங்கள் பணத்தை இழக்கலாம்.
கடன் அட்டை திருடப்பட்டது குறித்து சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவர் வங்கிக்குத் தெரியப்படுத்தினார். இருப்பினும், அட்டையை நேரடியாகப் பயன்படுத்தி பொருள்கள் வாங்கப்பட்ட காரணத்தால் இழந்த பணத்தைப் பாதிக்கப்பட்டவர் திரும்பப்பெற இயலாது.

