தரைவீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து கொள்ளையடித்த மூவருக்குச் சிறை

தரைவீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து கொள்ளையடித்த மூவருக்குச் சிறை

படம்: சாவ்பாவ்

22 Oct 2026 - 8:50 pm

2 mins read

சிங்கப்பூரில் உள்ள தரைவீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து கொள்ளைக் குற்றத்தில் ஈடுபட்டு, $644,700 மதிப்பிலான பொருள்களையும் பணத்தையும் திருடியதாக மூன்று வெளிநாட்டு ஆடவர்களுக்கு வியாழக்கிழமை (அக்டோபர் 22) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஸ்பானிய-கொலம்பியரான 62 வயது ஹெர்னாண்டோ கிரால்டோ ஃபிராங்கோவுக்கு ஆறு ஆண்டுகள் எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மெக்சிகோ நாட்டவரான 53 வயது கார்சியா இக்லேசியாஸ் ஹெக்டர் டேனியல், மெக்சிகோ-கொலம்பிய நாட்டவரான 49 வயது கார்சஸ் முரில்லோ மாட்டியோ ஆண்ட்ரெஸ் ஆகிய இருவருக்கும் தலா ஏழு ஆண்டுகள் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

திருட்டு, வீடு புகுந்து கொள்ளையடித்தல், குற்றச் செயல்கள் மூலம் கிடைத்த பலன்களை மறைத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை இவர்கள் மூவரும் ஒப்புக்கொண்டனர்.

நண்பர்களான இம்மூவரும் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் முதன்முறையாகச் சிங்கப்பூருக்கு வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2025 மே 9ஆம் தேதி இரவு 9.30 மணிக்குச் சற்று முன்பாக, இம்மூவரும் டன்னர்ன் குளோஸ் பகுதிக்குச் சென்று, விளக்குகள் எரியாத ஓர் வீட்டைத் தேர்ந்தெடுத்தனர். அந்த வீட்டிலிருந்து தங்க நாணயங்கள், நகைகள், வைரம் பதித்த மோதிரங்கள், தோடுகள், விலை உயர்ந்த கடிகாரங்கள், ரொக்கம் உட்பட ஏறத்தாழ S$644,700 மதிப்பிலான பொருள்களை அவர்கள் திருடிச் சென்றனர்.

இதை அடுத்து எங் நியோ அவென்யூவில் உள்ள தரைவீட்டுக்குள் அத்துமீறு நுழைந்து கொள்ளையடிக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

2025ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதியன்று, அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் மூவரும் கைது செய்யப்பட்டனர். திருடப்பட்ட பொருள்கள் அனைத்தும் மீட்கப்பட்டு, அந்த ஆடவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

வீடு புகுந்து கொள்ளையடித்த குற்றத்துக்காக அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

குறிப்புச் சொற்கள்