2025ஆம் ஆண்டுக்கான 100 செல்வாக்குமிக்க பெண்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் புதன்கிழமையன்று (டிசம்பர் 10) வெளியிட்டது.
அதில் சிங்கப்பூரைச் சேர்ந்த மூன்று பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
டிபிஎஸ் வங்கிக் குழுமத்தின் தலைமை நிர்வாகி டான் சூ ஷான் அப்பட்டியலில் 29வது இடத்தையும் தெமாசெக் அறநிறுவனத்தின் தலைவரும் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கின் மனைவியுமான ஹோ சிங் 34வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
திருவாட்டி ஹோ சிங் பலமுறை அப்பட்டியலில் இடம்பிடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான பட்டியலில் அவர் 32வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு அடுத்தபடியாக கிரானைட் ஆசியா முதலீட்டு நிறுவனத்தின் மூத்த நிர்வாகப் பங்காளியான ஜென்னி லீ 96வது இடத்தில் உள்ளார்.
ஊடகம், நன்கொடை, அரசியல், வர்த்தகம் ஆகியவற்றில் தடம் பதித்த பெண்கள் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
அவர்களில் கிட்டத்தட்ட 44 விழுக்காட்டினர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை வகிக்கின்றனர். 10 பேர் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் நிறுவனர்கள்.
நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதிலும் அவற்றைத் திறம்பட நடத்துவதிலும் பெண்களின் பங்களிப்பையும் அவர்களின் தொடர்ச்சியான வளர்ச்சியையும் மேற்குறிப்பிட்ட எண்ணிக்கை வெளிப்படுத்துவதாக ஃபோர்ப்ஸ் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
ஜப்பானின் முதல் பெண் பிரதமர் சானே தகாய்ச்சி அப்பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடித்தார். அதன்படி அவர்தான் ஆசியாவின் ஆகச் செல்வாக்குமிக்க பெண். ஆசிய - பசிபிக் வட்டாரத்தைச் சேர்ந்த JD.com தலைமை நிர்வாக அதிகாரி சாண்டி ரன் சூ 32வது இடத்திலும் பைட்டென்ஸ் தலைமை நிதி அதிகாரி ஜூலி காவ் 47வது இடத்திலும் உள்ளனர்.
ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் 2025ஆம் ஆண்டுக்கான ஆகச் செல்வாக்குமிக்க பெண்ணாகப் பட்டியலில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.


