சிங்கப்பூரில் மின்சார வாகன மின்னூட்டும் சேவை வழங்குவதை டோட்டல்எனர்ஜிஸ் சார்ஜிங் சர்வீசஸ் நிறுவனம் நிறுத்துகிறது.
தமது கட்டுப்பாட்டின்கீழ் உள்ள அனைத்து மின்னூட்டுக் கருவிகளையும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வேறு நிறுவனங்களிடம் அது ஒப்படைத்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமையிலிருந்து (நவம்பர் 28) டோட்டல்எனர்ஜிசுக்குச் சொந்தமான மின்னூட்டுக் கருவிகளில் 63 கருவிகள் மூடப்பட்டு எஸ்பி மொபிலிட்டியிடம் ஒப்படைக்கப்படும் என்று வாடிக்கையாளர்களிடம் மின்னஞ்சல் அனுப்பிவைக்கப்பட்டது.
அக்டோபர் மாதம் இறுதி நிலவரப்படி டோட்டல்எனர்ஜிஸ் நிறுவனத்துக்குச் சொந்தமாக 1,465 மின்னூட்டுக் கருவிகள் இருந்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
சிங்கப்பூரில் மொத்தம் 11,282 மின்சார வாகன மின்னூட்டுக் கருவிகள் உள்ளன.
அவற்றில் சில மின்னூட்டுக் கருவிகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னூட்டு விசைகள் உள்ளன.
பிடோக், பீஷான், பொங்கோல், செங்காங், பாசிர் ரிஸ், தெம்பனிஸ், தோ பாயோ போன்ற வட்டாரங்களில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வாகன நிறுத்துமிடங்களில் உள்ள டோட்டல்எனர்ஜிஸ் நிறுவனத்தின் மின்னூட்டுக் கருவிகள் எஸ்பி மொபிலிட்டியிடம் ஒப்படைக்கப்படும்.
எஸ்பி மொபிலிட்டி தகவல் தெரிவிக்கும் வரை இந்த மின்னூட்டுக் கருவிகள் இயக்கப்படாது.
தொடர்புடைய செய்திகள்
மின்னூட்டுக் கருவிகள் அனைத்தையும் பெற்றுக்கொண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதிக்குள் அவற்றை இயக்கத் தொடங்க தமது நிறுவனம் இலக்கு கொண்டிருப்பதாக எஸ்பி மொபிலிட்டியின் நிர்வாக இயக்குநர் திரு டீன் செர் கூறினார்.
புதிய மின்சாரக் கணக்குகளைத் தொடங்குவது, மின்னூட்டுகளை மறுபெயரிடுதல், எஸ்பி மொபிலிட்டியின் கட்டமைப்புடன் அவற்றை ஒருங்கிணைப்பது, மின்னூட்டுக் கருவிகளை இயக்குவதற்கு முன்பு அவற்றைச் சோதனையிடுவது போன்ற பணிகளில் எஸ்பி மொபிலிட்டி ஈடுபடும்.

