பிடோக்-தெம்பனிஸ், தானா மேரா-எக்ஸ்போ இடையே டிசம்பர் 8 முதல் மீண்டும் ரயில் சேவை

2 mins read
திட்டமிட்டதைவிட ஒருநாள் முன்னதாகவே தொடங்கப்படும் என அறிவிப்பு
b358ef7f-65f5-4ad5-b2cf-e7552c520ae8
அந்நிலையங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டுவந்த தண்டவாளப் பாதுகாப்பு, மீயொலி (ultrasound) உள்ளிட்ட விரிவான சோதனைகளும் மின்சாரம், ரயில் சமிக்ஞை அமைப்புகளின் பராமரிப்புப் பணிகளும் முடிந்ததாக ஆணையம் கூறியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிடோக் - தெம்பனிஸ் நிலையங்களுக்கு இடையிலும் தானா மேரா - எக்ஸ்போ நிலையங்களுக்கு இடையிலும் மேற்கொள்ளப்பட்டுவந்த தடம் அமைக்கும் பணிகள் திட்டமிட்ட காலத்துக்கு முன்னதாகவே நிறைவடைந்துவிட்டன.

அதனால், அறிவிக்கப்பட்டதைவிட ஒருநாள் முன்னதாகவே அந்நிலையங்களில் ரயில் சேவை தொடங்கும் என ஞாயிற்றுக்கிழமையன்று (டிசம்பர் 7) நிலப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

மேலும், அந்நிலையங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டுவந்த தண்டவாளப் பாதுகாப்பு, மீயொலி (ultrasound) உள்ளிட்ட விரிவான சோதனைகளும் மின்சாரம், ரயில் சமிக்ஞை அமைப்புகளின் பராமரிப்புப் பணிகளும் முடிவடைந்ததாக அது கூறியது.

கட்டமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் முடிந்து அந்நிலையங்களில் ரயில் சேவை டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது அதற்கு ஒருநாள் முன்னதாகவே அதாவது, திங்கட்கிழமை (டிசம்பர் 8) அந்நிலையங்கள் வழக்கநிலைக்குத் திரும்பவுள்ளதாக அந்தப் பதிவில் ஆணையம் குறிப்பிட்டது.

கிழக்கு-மேற்கு பாதையிலிருந்து புதிய ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைந்த பணிமனைக்குத் தடங்களை இணைக்கும் பணிகளுக்காகத் தானா மேரா, சீமெய் ரயில் நிலையங்கள் நவம்பர் 29ஆம் தேதி மூடப்பட்டன. 

அப்பணிகளைத் தவிர, தானா மேரா நிலையத்தில் புதிய நடைமேடை ஒன்றை அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

தடங்கள் அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் கிழக்கு- மேற்கு பாதையில் இருக்கும் கெம்பாங்கான், பிடோக் நிலையங்களில் ரயில்களுக்கான காத்திருப்பு நேரம் கிட்டத்தட்ட17 நிமிடங்களாக நீட்டிக்கப்படும் என ஆணையம் டிசம்பர் 5ஆம் தேதி தெரிவித்தது.

ரயில்களையும் பிற அமைப்புகளையும் சோதிப்பதற்காக நடைமேடை ஒன்றை ஆணையம் பயன்படுத்தியதால் ரயில்களுக்கான காத்திருப்பு நேரம் நீட்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்