காலாங் வட்டாரத்தில் நிகழ்ந்த விபத்தில் லாரி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.
வாகனத்தின்மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற மற்றொரு வாகனம் சம்பந்தப்பட்ட அந்த விபத்து கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 20) நிகழ்ந்தது. அதில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 33 வயது ஆடவர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) கைது செய்யப்பட்டார்.
ஆபத்தான முறையில் தமது காரை ஓட்டிச் சென்ற குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
கிங் ஜார்ஜஜ் அவென்யூவும் லவண்டர் ஸ்திரீட்டும் சந்திக்கும் இடத்தில் இரவு நேரத்தில் லாரியும் காரும் மோதிக்கொண்டன.
ஆனால், சம்பவ இடத்திற்குக் காவல்துறையினர் வருமுன்னரே கார் ஓட்டுநர் தமது காருடன் அங்கிருந்து தப்பிவிட்டார்.
நினைவிழந்த நிலையில், டான் டோக் செங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 57 வயது லாரி ஓட்டுநர் பிறகு மாண்டதாக அறிவிக்கப்பட்டது.
விபத்து தொடர்பான காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.