துவாஸ் மேம்பாலச் சாலை விரிவாக்கம்: 3 நிறுவனங்களுக்கு $1.2 பில்லியன் ஒப்பந்தங்கள்

துவாஸ் மேம்பாலச் சாலை விரிவாக்கம்: 3 நிறுவனங்களுக்கு $1.2 பில்லியன் ஒப்பந்தங்கள்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

30 Sep 2026 - 5:50 pm

2 mins read

துவாஸ் சவுத்தில் எதிர்கால மேம்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், துவாஸ் ரோடு மேம்பாலச் சாலையின் விரிவாக்கப் பணியில் மூன்று நிறுவனங்கள் ஈடுபடும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

துவாஸ் ரோடு மேம்பாலச் சாலையின் இரண்டாம் கட்டக் கட்டுமானத்திற்காக ஏறக்குறைய $1.2 பில்லியன் மதிப்பிலான மூன்று ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆணையம் புதன்கிழமை (செப்டம்பர் 30) வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

கட்டுமானப் பணிகள் 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கி, 2032ஆம் ஆண்டுமுதல் கட்டம் கட்டமாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தப் பணிகள் புதிய மேம்பாலச் சாலைகள், சாலை மேம்பாடுகள், வடிகால் சீரமைப்புகள், துணை உள்கட்டமைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கும்.

பணிகள் நிறைவடைந்ததும், துவாஸ் ரோடு மேம்பாலச் சாலையும் அதன் இரண்டாம் கட்ட விரிவாக்கமும், ஆயர் ராஜா விரைவுச்சாலை, தீவு விரைவுச்சாலை ஆகியவற்றிலிருந்து பைனியர் சாலை மற்றும் துவாஸ் சவுத் வரை நீடிக்கும் ஒரு சாலை வழியாக துவாஸ் துறைமுகத்திற்கு நேரடி இணைப்பை வழங்கும்.

பைனியர் சாலையில் அமைக்கப்படும் மேம்பாலச் சாலையின் ஒரு பகுதியை ‘ஹுவா செங் பில்டர்’ நிறுவனம் கட்டும் என்றும் அதற்கு $381.6 மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஆணையம் தெரிவித்தது.

துவாஸ் சவுத் அவென்யூ 3ல் அமையும் மேம்பாலச் சாலையின் ஒரு பகுதிக்கு, $430.3 மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தம், ‘சைனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்‌ஷன்’ நிறுவனத்தின் சிங்கப்பூர்க் கிளைக்கு வழங்கப்பட்டது.

அதோடு, $404.4 மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ‘சைனா ஹார்பர் (சிங்கப்பூர்) எஞ்சினியரிங்’ நிறுவனம் துவாஸ் சவுத் பொலிவார்டில் அமையும் மேம்பாலச் சாலையின் ஒரு பகுதியைக் கட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
மேம்பாலம்நிலப் போக்குவரத்து ஆணையம்ஒப்பந்தம்