தியோங் பாருவில் உள்ள போருக்கு முந்தைய இரண்டு வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக்குகள் இல்ல மேம்பாட்டுத் திட்டத்தில் (எச்ஐபி) பங்கேற்க போதுமான வாக்குகளைப் பெறத் தவறின.
அங்குள்ள குடியிருப்பாளர்கள், தங்கள் பழைய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த முடிவால் தாங்கள் ஏமாற்றமடைந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.
எச்ஐபி பணிகளை மேற்கொள்வதற்கு 75 விழுக்காட்டு வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் லிம் லியாக் ஸ்திரீட்டிலுள்ள புளாக் 35க்கு ஒரு ‘ஆம்’ வாக்கு மட்டுமே தேவைப்பட்டதை நவம்பர் 21 அன்று வெளியிடப்பட்ட வாக்களிப்பு முடிவுகள் காட்டின. அந்த புளோக்கிலுள்ள 15 வீடுகளில் 11 வீடுகள் எச்ஐபிக்கு ஆதரவாக வாக்களித்தன; நான்கு வீடுகள் வாக்களிக்கவில்லை.
புளாக் 34 கிம் செங் ஸ்திரீட்டில் உள்ள 24 வீடுகளில் 16 வீடுகள் எச்ஐபிக்கு ஆதரவாகவும் இரண்டு எதிராகவும் வாக்களித்தன; ஆறு வீடுகள் வாக்களிக்கவில்லை. வாக்களிப்பு வரம்பைக் கடக்க இரண்டு வாக்குகள் தேவைப்பட்டன.
1949ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த இரண்டு புளோக்குகளும், நவம்பர் மாதத் தொடக்கத்தில் எச்ஐபி மேம்பாடுகளைச் செய்யலாமா வேண்டாமா என்று வாக்களித்த தியோங் பாருவில் உள்ள 29 புளோக்குகளில் அடங்கும். மற்ற 27 புளோக்குகளுக்கான வாக்கெடுப்பு வெற்றிகரமாக முடிந்தது.
அனைத்தும் வீவகவுக்கு முன்னோடியான சிங்கப்பூர் மேம்பாட்டு அறக்கட்டளையால் (எஸ்ஐடி) கட்டப்பட்ட மின்தூக்கியில்லா நான்கு மாடி அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆகும்.
பழைய வீவக அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான எச்ஐபி திட்டம், பழைய வீடமைப்புப் பேட்டைகளை மேம்படுத்தவும் உதிர்ந்துபோன கான்கிரீட் போன்ற பொதுவான பராமரிப்பு சிக்கல்களைத் தீர்க்கவும் 2007ல் தொடங்கப்பட்டது. ஒரு புளோக்கின் தகுதிவாய்ந்த சிங்கப்பூர் குடிமக்கள் குடும்பங்களில் குறைந்தது 75 விழுக்காட்டினர் ஆதரவாக வாக்களித்தால் மட்டுமே அப்பணிகள் மேற்கொள்ளப்படும். நிரந்தரவாச குடும்பங்கள் அதற்குத் வாக்களிப்பதற்குத் தகுதியற்றவை.
வாக்கெடுப்பு நிறைவேறினால், குடியிருப்பாளர்கள் உதிர்ந்த கான்கிரீட் பரப்புகளைச் சரிசெய்தல் போன்ற சில கட்டாய வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும். ஆனால், குளியலறையைப் புதுப்பிப்பது போன்ற பிற மேம்பாடுகளைத் தவிர்க்கலாம்.
தொடர்புடைய செய்திகள்
1970களில் இருந்து புளோக் 34ல் உள்ள தனது மூவறை வீட்டில் வசித்து வரும் 70 வயதான திரு ராபின் லோய், தனது சேவை முற்றத்தில் உள்ள இரும்புக் குழாய்களையும், துருப்பிடித்த முன்வாயிலையும் எச்ஐபி திட்டம் மாற்றும் என்று நம்பியதாகக் கூறினார்.
“நான் ஏமாற்றமடைந்துள்ளேன். ஆனால், இப்போது என்னால் அதிகம் செய்யக்கூடியது எதுவும் இல்லை,” என்று அவர் கூறினார்.
இது குறித்து தமது ஃபேஸ்புக்கில் கருத்துரைத்த தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபூ செசியாங், அடுத்த இரு வாரங்களில் சம்பந்தப்பட்ட புளோக்குகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களிடம் பேசவிருப்பதாகத் தெரிவித்தார்.

