சாங்கி விமான நிலையக் கடைகளில் இரு இந்திய நாட்டுப் பெண்கள் திருடினர்: ஒருவருக்குச் சிறை, மற்றொருவருக்கு $700 அபராதம்

2 mins read
54e8f955-53f2-4030-b18a-079e7cd7aae7
அரசு நீதிமன்ற வளாகத்திலிருந்து திங்கட்கிழமை (ஜூன் 16) புறப்படும் கார்க் பிரஷா, 30. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இந்தியாவின் கோல்கத்தாவிலிருந்து சிங்கப்பூருக்கு ஜூன் 2ஆம் தேதி வந்த இந்திய நாட்டுப் பெண்கள் இருவர், இங்கிருந்து பாலித் தீவுக்கு விமானப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பு சாங்கி விமான நிலையத்தில் டிரான்சிட்டில் இருந்தனர்.

அப்போது விமான நிலையத்தில் உள்ள கடைகளிலிருந்து திருடிய அவ்விருவரும் அதிகாரிகளால் விரைவில் பிடிபட்டனர்.

இந்தியாவிலிருந்து சாங்கியில் வந்திறங்கியவுடன் முனையம் 2ல் உள்ள சார்ல்ஸ் & கீத் கடைக்குள் கார்க் பிரஷா, 30, நுழைந்தார்.

காலை 7 மணியளவில் அந்தக் கடையில் பொருள்களைப் பார்த்துக்கொண்டிருந்த அவர், கறுப்பு முதுகுப்பை (haversack bag) ஒன்றைக் கவனித்தார். பயணப்பெட்டித் தள்ளுவண்டியில் அந்த முதுகுப்பையை வைத்து, அதற்குக் கட்டணம் செலுத்தாமல் கடையிலிருந்து கார்க் வெளியெறினார்.

கடை ஊழியர் ஒருவர் நடந்ததைக் கவனித்ததைத் தொடர்ந்து, காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

பின்னர் அந்த முதுகுப்பையுடன் கண்டறியப்பட்ட கார்க், அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். $80க்குமேல் மதிப்புடைய அந்த முதுகுப்பை, அதன் அசல் நிலையில் மீட்கப்பட்டது.

திருடிய குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு திங்கட்கிழமை (ஜூன் 16) $700 அபராதம் விதிக்கப்பட்டது.

சிங்கப்பூர் வந்திறங்கிய ஒரு மணி நேரத்திற்குள் கார் இக்குற்றம் புரிந்ததாக துணை முதன்மை மாவட்ட நீதிபதி லூக் டான் கூறினார்.

மற்றொரு நிலவரத்தில், திருடிய குற்றத்தை ஒப்புக்கொண்ட கோயங்கா சிம்ரன் எனும் 29 வயதுப் பெண்ணுக்கு திங்கட்கிழமை எட்டு நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்குத் தண்டனை விதிப்பதில் மற்றொரு குற்றச்சாட்டு கருத்தில் கொள்ளப்பட்டது.

அதே ஜூன் 2ஆம் தேதி சிங்கப்பூர் வந்திறங்கிய கோயங்கா, பாலித் தீவுக்குச் செல்வதற்காக முனையம் 3ல் டிரான்சிட்டில் இருந்தார்.

பிற்பகல் 1.40 மணிக்கு ஃபர்லா (Furla) கடைக்குள் நுழைந்த அவர், அங்கு மஞ்சள் பணப்பை இருந்ததைக் கண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. $300க்குமேல் மதிப்புடைய அந்தப் பணப்பை எடுத்து பயணப்பெட்டித் தள்ளுவண்டியில் வைத்த அவர், அதற்குக் கட்டணம் செலுத்தாமல் கடையிலிருந்து வெளியெறினார்.

இதுபோக, முனையம் 2ல் உள்ள ஒப்பனைப் பொருள் கடை ஒன்றிலிருந்து $200க்குமேல் மதிப்பிலான வாசனைத் திரவியத்தைத் திருடிய குற்றத்தையும் கோயங்கா ஒப்புக்கொண்டார்.

“சிங்கப்பூரில் அவர் 10 மணி நேரம் மட்டுமே இருந்திருக்க வேண்டும். ஆனால், அந்த நேரத்தில் $500க்குமேல் மதிப்புடைய பொருள்களைத் திருடினார்,” என்றார் நீதிபதி.

“அதிகாரிகளும் ஊழியர்களும் விரைவாகச் செயல்பட்டிருக்காவிட்டால் அவர் பிடிபடாமல் இங்கிருந்து சென்றிருப்பார். அவ்வாறு அவர் சென்றிருந்தால், திருடப்பட்ட பொருள்களை மீட்க முடியாமல் போயிருக்கும்,” என்றும் நீதிபதி சொன்னார்.

கார்க்குக்கும் கோயங்காவுக்கும் ஒருவரையொருவர் தெரியும் என்றாலும், திருட்டுக் கும்பலின் ஒரு பகுதியாக அவர்கள் செயல்படவில்லை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்