லார்னி சாலை அருகே வியாழக்கிழமை (நவம்பர் 21) கண்டெடுக்கப்பட்ட இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு, கையாள்வதற்குப் பாதுகாப்பானது எனக் கண்டறியப்பட்டது. சிங்கப்பூர் ஆயுதப் படையின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவால் அது அப்புறப்படுத்தப்பட்டது.
எண் 239, சைம் சாலையில் காலை 9.15 மணியளவில், வெடிக்காத நிலையில் இருந்த அந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது குறித்து தனக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது. கெப்பல் கிளப் எனும் பொழுதுபோக்கு மன்றத்தின் முகவரி அது.
இதனால் பொதுமக்களுக்கு ஆபத்து எதுவுமில்லை எனக் காவல்துறை சொன்னது. கெப்பல் கிளப்புக்குப் பக்கத்தில் உள்ள சிங்கப்பூர் ஐலண்ட் கன்ட்ரி கிளப் அதன் உறுப்பினர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், மாலை 5 மணியளவில் அந்த வெடிகுண்டு அகற்றப்பட்டதாகக் கூறியது.
அந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கன்ட்ரி கிளப் (country club) பாதுகாவலர்களும் அதிகாரிகளும் போக்குவரத்தை மாற்றிவிட்டதுடன் சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சுற்றி தடுப்புகளை அமைத்தனர். பெரிய தடங்கலின்றி கன்ட்ரி கிளப்பின் செயல்பாடுகள் தொடர்ந்ததாக அது கூறியது.

