சிங்கப்பூரில் பகுதி மின்கடத்தி பங்குகளின் மதிப்பு குறையவில்லை

சிங்கப்பூரில் பகுதி மின்கடத்தி பங்குகளின் மதிப்பு குறையவில்லை

படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

20 Oct 2026 - 7:24 pm

2 mins read

சிங்கப்பூர் பங்குச் சந்தையில் பகுதி மின்கடத்தி தொடர்பான பங்குகள் ஏராளமாக விற்கப்பட்டு வரும் நிலையிலும் அவற்றின் சந்தை மதிப்பு மேல்நோக்கியே தொடர்கிறது.

சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி செப்டம்பர் மாதத்தில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 68.4 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தின் 46.1 விழுக்காட்டு வளர்ச்சியைவிட இது வேகமானது.

மேலும், தொடர்ந்து 13வது மாதமாக ஏற்றுமதி வளர்ச்சி கண்டு வருகிறது.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த வளர்ச்சி மாற்றமின்றி தொடர்வதும் ஏற்றுமதி அதிகரிப்புக்கு முக்கிய காரணம்.

டிஸ்க் மீடியா தயாரிப்புகள், நுண்சில்லுகள், கணினிகள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்ததால், மின்னணு ஏற்றுமதி 107.6 விழுக்காடு வரை இரட்டிப்பிற்கும் மேலாக உயர்ந்தது.

அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 73.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதேவேளை, தைவான் மற்றும் தென்கொரியாவுக்கான ஏற்றுமதி கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது.

வட்டார பகுதி மின்கடத்தி விநியோகத் தொடரில் சிங்கப்பூர் எவ்வளவு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது என்பதற்கு இதுவே சான்று.

நடப்பு ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், எண்ணெய் சாரா ஏற்றுமதி 27.6 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இந்த வளர்ச்சி, இந்த ஆண்டு முழுவதும் 14 முதல் 16 விழுக்காடு வரை வளர்ச்சி இருக்கும் என்று என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு கணித்ததைக் காட்டிலும் மிகவும் அதிகம்.

மின்னணுவியல் துறையின் எதிர்பாராத வலுவான வளர்ச்சியைக் குறிப்பிட்டு, இந்த ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கான முன்னுரைப்பை வர்த்தக, தொழில்துறை அமைச்சு இருமுறை உயர்த்தியது. அதாவது, 4.5 விழுக்காட்டில் இருந்து 5.5 விழுக்காடு வரை அந்தக் கணிப்பு உயர்ந்தது.

சிங்கப்பூர் பங்குச் சந்தையில், மூன்று நிறுவனங்கள் இந்த ஏற்ற வீச்சில் வெவ்வேறு கோணங்களில் நேரடிப் பங்களிப்பை வழங்குகின்றன. யுஎம்எஸ் இன்டெக்ரேஷன், ஏஇஎம் ஹோல்டிங்ஸ், ஃபிரெங்கென் குரூப் ஆகிய நிறுவனங்கள் அவை.

யுஎம்எஸ் இன்டெக்ரேஷன் நிறுவனம், சிலிக்கான் வேஃபர்களில் அடுக்குகளைப் படிய வைக்கவும் செதுக்கவும் பயன்படும் இயந்திரங்களுக்கான துல்லியமான பாகங்களைத் தயாரிக்கிறது.

ஏஇஎம் ஹோல்டிங்ஸ், செயற்கை நுண்ணறிவு மற்றும் உயர் செயல்திறன் கணினி சில்லுகளுக்கான சோதனை மற்றும் கையாளும் தீர்வுகளை வழங்குகிறது.

மூன்றாவது நிறுவனமான ஃபிரெங்கென் குரூப், ஒரு பன்முகப்படுத்தப்பட்ட ‘மெக்காட்ரானிக்ஸ்’ உற்பத்தியாளர் ஆகும். அதன் வருவாயில் கிட்டத்தட்ட பாதி அளவு பகுதி மின்கடத்திகளில் இருந்து வருகிறது.

நிறுவனங்களின் வருவாய் எதிர்பார்ப்புகளை ஈடுசெய்ய முடிகிறதா என்பதைப் பொறுத்தே அவற்றின் இறுதி லாப விகிதம் அமையும்.

குறிப்புச் சொற்கள்
பங்குச் சந்தைபகுதி மின்கடத்திமதிப்பு