சாலைத் தடங்களுக்கிடையே புகுந்து சென்ற வேன்; ஓட்டுநர்கள் எரிச்சல்

1 mins read
867d253c-da2c-43c0-ad32-a1d549d06443
மோட்டார்சைக்கிளோட்டிகள் பலரும் வேன் ஓட்டுநரைத் திட்டிச் சென்றனர். - படம்: எஸ்ஜி ரோட் விஜிலாண்டே

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியை நோக்கி சாரைசாரையாக வாகனங்கள் நின்றிருந்தபோது மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட வேன் ஒன்று துணிந்து அந்த வாகனங்களைக் கடந்து செல்ல முற்பட்டது.

சம்பவத்தைக் காட்டும் காணொளி ஒன்றில், மோட்டார்சைக்கிள் போன்று இரு சாலைத் தடங்களுக்கு இடையே ஒரு வேன் செல்வதைக் காண முடிகிறது. ஜனவரி 11ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.49 மணியளவில் காணொளி பதிவுசெய்யப்பட்டது.

இவ்வாறு வேன் சென்றபோது மற்ற வாகனங்களிலிருந்து ஹார்ன் சத்தம் தொடர்ந்து சத்தமாக ஒலித்துக்கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில், வாகனங்களுக்கு இடையே புகுந்திட முடியாமல் வேன் நிற்க வேண்டிய நிலை வந்தது.

இதனால், வேன் பின்னால் இருந்த மோட்டார்சைக்கிள்களும் நின்று போயின.

அதன் பின்னர், வேனைச் சுற்றிச் சென்ற ஒவ்வொரு மோட்டார்சைக்கிளோட்டியும் வேன் ஓட்டுநரை எரிச்சலுடன் திட்டிச் சென்றனர்.

இதற்கிடையே, சிங்கப்பூரில் அந்த வேனுக்கு எதிராகப் பல போக்குவரத்து அபராதங்கள் கட்டப்படாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இத்தகைய நிலையில், சிங்கப்பூரில் எவ்வாறு அந்த வேனை ஓட்ட முடிகிறது என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுபோன்ற ஒருவர், அவசர மருத்துவ வண்டியை ஓட்டினால் நோயாளியை மருத்துவமனையில் சிறிது நேரத்தில் சேர்த்துவிடலாம் என்று ஓர் இணையவாசி கிண்டலும் செய்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்