வான் யாங் ஹெல்த் புரொடக்ட் அண்ட் ஃபுட் ரிஃப்ளக்ஸாலஜி சென்ட்டர் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதன் தொடர்பில் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்திற்குச் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) நிலவரப்படி 439 புகார்கள் வந்துள்ளன.
இதனை அச்சங்கத்தின் தலைவர் மெல்வின் யோங் புதன்கிழமையன்று (டிசம்பர் 3) தெரிவித்தார்.
ஏற்கெனவே செய்த முன்பதிவுகளால் $904,000க்கும் மேல் இழப்பு ஏற்பட்டதாய்ப் பயனீட்டாளர்கள் தெரிவித்ததாகத் திரு யோங் கூறினார்.
நவம்பர் மாத இறுதியில் அந்தத் தொகை கிட்டத்தட்ட 29,000 வெள்ளியாக இருந்தது.
உடற்பிடிப்பு, கால்பிடிப்பு நிலையமான ‘வான் யாங்’ அதன் மூன்று நிலையங்களின் செயல்பாடுகளை நவம்பர் 21ஆம் தேதி நிறுத்தியதை அவர் உறுதிப்படுத்தியதோடு, தற்போது அவற்றில் கலைப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
மேலும், பயனீட்டாளர் சங்கம் முன்மொழிந்துள்ள கலைப்பாளர்களுடன் அது தொடர்பில் இருப்பதாகவும் பயன்படுத்தப்படாத முன்பதிவுகளுக்கான கட்டணம் குறித்து சங்கத்திடம் புகார் அளித்த பாதிக்கப்பட்டோர் குறித்து கலைப்பாளர்களிடம் நேரடியாகப் பரிந்துரைக்க அது உதவும் எனத் திரு யோங் தெரிவித்தார்.

