வாகன நுழைவு உரிம (விஇபி) முறையைப் பின்பற்றாத வாகனங்களுக்கு மலேசியாவின் சாலைப் போக்குவரத்துத் துறை 4,634 அழைப்பாணைகளை வழங்கியுள்ளது.
அதன்மூலம் மட்டும் கிட்டத்தட்ட 1.39 மில்லியன் ரிங்கிட்டை (S$437,216) அபராதமாகப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் வசூலித்துள்ளனர்.
மலேசியாவில் விஇபி முறை இவ்வாண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி நடப்புக்கு வந்தது. அதிலிருந்து இம்மாதம் 20ஆம் தேதிவரை நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கைகள்மூலம் 4,634 அழைப்பாணைகள் வழங்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு வாகனங்கள் மலேசியாவுக்குள் நுழையும்போது அவற்றில் விஇபி ஒட்டுவில்லைகள் இருக்க வேண்டும்.
இந்நிலையில், மலேசியா-சிங்கப்பூர் நிலவழி எல்லையில் சிங்கப்பூர் வாகனங்களைக் குறிவைத்து அந்நாட்டுச் சாலைப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதுவரை 65,000க்கும் அதிகமான சிங்கப்பூர் பதிவெண் கொண்ட வாகனங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெரும்பாலான நேரம் சுங்கத்துறை, குடிநுழைவு, தனிமைப்படுத்துதல் வளாகம், சுல்தான் இஸ்கந்தர் வளாகம், சுல்தான் அபு பக்கர் வளாகம் மற்றும் ஜோகூர் பாருவின் முதன்மைச் சாலைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
‘விஇபி’ பதிவு இல்லாத வாகனங்கள், ‘விஇபி’ பதிவு காலாவதியான வாகனங்கள், பதிவு நிலுவையில் உள்ள ‘விஇபி’ கொண்ட வாகனங்களுக்கு அழைப்பாணைகள் கொடுக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
அபராதம் விதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் அபராதத் தொகையைச் செலுத்திய பிறகே மலேசியாவிலிருந்து வெளியேற முடியும்.
அதேபோல், சிங்கப்பூர் பதிவெண் கொண்ட, விஇபி ஒட்டுவில்லை இல்லாத வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு 300 ரிங்கிட் (S$91) அபராதம் விதிக்கப்படும்.
இதுவரை 345,238 ஒட்டுவில்லைகள் வழங்கப்பட்டுள்ளதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர். அவற்றில் 292,692 தனிநபர் வாகனங்களின் ஒட்டுவில்லைகள் செயல்பாட்டில் உள்ளன; 16,404 ஒட்டுவில்லைகள் செயல்பாட்டில் இல்லை.
அதேபோல், நிறுவனங்களின்கீழ் உள்ள 28,344 தனியார் வாகனங்களின் ஒட்டுவில்லைகள் செயல்பாட்டில் உள்ளன; 7,798 ஒட்டுவில்லைகள் செயல்பாட்டில் இல்லை.

