சிங்கப்பூர் எஃப்1 கார்ப் பந்தயம்; வாகை சூடினார் வெர்ஸ்டாப்பன்

சிங்கப்பூர் எஃப்1 கார்ப் பந்தயம்; வாகை சூடினார் வெர்ஸ்டாப்பன்

1 of 2
படம்: ராய்ட்டர்ஸ்
படம்: ராய்ட்டர்ஸ்

11 Oct 2026 - 9:58 pm

2 mins read

இரவுநேர கார்ப் பந்தயமான சிங்கப்பூர் ஏர்லைன்சின் சிங்கப்பூர் கிராண்ட் ப்ரீ வெற்றியாளர் கிண்ணத்தை ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் கைப்பற்றினார்.

அவர் முதல்முறையாகச் சிங்கப்பூரில் வெற்றிபெற்றுள்ளார். 

இந்த வெற்றியின் மூலம் தற்போது செயல்பாட்டில் உள்ள அனைத்துப் பந்தயத் திடல்களிலும் வெர்ஸ்டாப்பன் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார்.

மொத்தம் 62 சுற்றுகள் கொண்ட பந்தயத்தை மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் முதல் நிலையிலேயே தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபெராரி அணியின் சார்ல்ஸ் லெக்லர்க் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மெர்சிடிஸ் அணியின் கிமி அன்டோனெல்லி  மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

தொடக்கத்தில் சார்ல்சுக்கும் வெர்ஸ்டாப்பனுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது. இருப்பினும், இறுதிவரை சிறப்பாகச் செயல்பட்டு வெற்றியை உறுதிசெய்தார் வெர்ஸ்டாப்பன்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லூயிஸ் ஹேமில்டன் ஆறாவது இடத்தில் முடித்து ஏமாற்றமளித்தார்.

கடந்த ஆண்டு வாகை சூடிய ஜார்ஜ் ரசல் ஒன்பதாவது இடத்தில் முடித்தார். அவர் பந்தயத்தைக் கடைசி இடத்தில் இருந்து தொடங்கினார்.

தற்போது ஓட்டுநர்களுக்கான புள்ளிப்பட்டியலில் கிமி அன்டோனெல்லி முதலிடத்தில் உள்ளார். அவர் ஏறக்குறைய உலக வெற்றியாளர் கிண்ணத்தை நெருங்கிவிட்டார். 

புள்ளிப்பட்டியலின் இரண்டாவது இடத்தில் ரசல் உள்ளார்.

அணிகளுக்கான புள்ளிப்பட்டியலில் மெர்சிடிஸ் முதலிடத்தில் உள்ளது.

இப்பருவத்தில் இன்னும் ஏழு பந்தயங்கள் மீதமுள்ளன. அடுத்த எஃப்1 கார்ப் பந்தயம் வரும் 23ஆம் தேதி அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் நடக்கிறது.

பயிற்சிச் சுற்று, குறும்பந்தயம், தகுதிச் சுற்று, பந்தயம் என வார இறுதியின் மூன்று நாள்களில் மட்டும் 301,295  ரசிகர்கள் திரண்டதாகச் சிங்கப்பூர் கிராண்ட் ப்ரீ ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5) தெரிவித்தது.

சிங்கப்பூரின் 18வது இரவுநேர கார்ப் பந்தயம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 8ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கான நுழைவுச் சீட்டுகளின் விற்பனையும் இப்போது தொடங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்