$29,000க்கும் மேல் இழந்ததாகப் பயனீட்டாளர்கள் புகார்

முன்னறிவிப்பின்றிக் கடைகளை மூடிய வான் யாங்; கவலையில் பயனீட்டாளர்கள்

2 mins read
2e3550ca-db6d-4ca1-94e3-2df1c8ca469b
வான் யாங் ஹெல்த் புரொடக்ட் அண்ட் ஃபுட் ரிஃப்ளக்ஸாலஜி சென்ட்டர் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதால் பயனீட்டாளர்கள், முன்பதிவுக் கட்டணங்களின் காரணமாக $29,000க்கும் மேல் இழந்ததாகத் தெரிவித்துள்ளனர். - படம்: ‌ஷின் மின் டெய்லி நியூஸ்

வான் யாங் ஹெல்த் புரொடக்ட் அண்ட் ஃபுட் ரிஃப்ளக்ஸாலஜி சென்ட்டர் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதன் தொடர்பில் சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) நிலவரப்படி 15 புகார்களைப் பெற்றுள்ளது. சங்கத்தின் தலைவர் மெல்வின் யோங், ஃபேஸ்புக் பதிவில் திங்கட்கிழமை அதனைத் தெரிவித்தார்.

சாவ்பாவ் ஊடகத்தில் வெளியான கட்டுரையில் வான் யாங், சிங்கப்பூரில் உள்ள அதன் ஐந்து கிளைகளையும் திடீரென்று மூடிவிட்டதாகக் கூறப்பட்டிருந்தது.

ஏற்கெனவே செய்த முன்பதிவுகளால் $29,000க்கும் மேல் இழப்பு ஏற்பட்டதாய்ப் பயனீட்டாளர்கள் தெரிவித்ததாகத் திரு யோங் சொன்னார்.

பயன்படுத்தாத முன்பதிவுகளுக்கான கட்டணத்தை நிறுவனம் எவ்வாறு திருப்பிக்கொடுக்கப்போகிறது என்ற விவரத்தைச் சங்கம் கேட்டுள்ளது.

“நிறுவனம் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதால், முன்பதிவுகளுக்குக் கொடுத்த கட்டணத்தைப் பயனீட்டாளர்கள் இழந்தது குறித்துச் சங்கம் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது,” என்றார் திரு யோங்.

இவ்வாண்டின் (2025) முற்பாதியில் அழகு, நல்வாழ்வுத் துறை சம்பந்தப்பட்ட சேவைகளுக்கு முன்கூட்டியே கட்டணத்தைச் செலுத்தியதால் $108,000ஐ இழந்ததாகப் பயனீட்டாளர்கள் தெரிவித்திருந்தனர். சென்ற ஆண்டின் $19,000 நட்டத்தைக் காட்டிலும் அது கிட்டத்தட்ட 460 விழுக்காடு அதிகம்.

அழகு, நல்வாழ்வுத் துறையில் சேவைகளுக்கு முன்கூட்டியே கட்டணம் செலுத்தும்போது பயனீட்டாளர்கள் சிந்தித்து முடிவெடுக்கக் கட்டாயம் ஐந்து நாளை ஒதுக்கும் முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பயனீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்கச் சங்கம் தொடர்ந்து அரசாங்கத்துடனும் தொழில்துறையினருடனும் கலந்துபேசும் என்றார் திரு யோங். முன்பதிவுக் கட்டணங்களைப் போடுவதற்கென நிறுவனங்கள் தற்காலிகக் கணக்கை வைத்திருக்கவும் ஊக்குவிக்கப்படுகின்றன. அவை திடீரென்று மூடப்படும் சூழலில், பயனீட்டாளர்களின் பணம் அதில் பாதுகாப்பாக இருக்கும் என்று திரு யோங் கூறினார்.

முன்பதிவுக் கட்டணங்களைச் செலுத்திவிட்டு இன்னும் சேவைகளைப் பெறாதோர், பயனீட்டாளர் சங்கத்தை நாடலாம்.

நேரடித் தொலைபேசி எண்: 6277-5100

இணைய முகவரி: www.case.org.sg

குறிப்புச் சொற்கள்