ஜோகூர்-சிங்கப்பூர் வீட்டு மானியத் திட்டம் தொடர்பான மோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மானியத் திட்டம் அல்லது ஜோகூரில் இலவச வீடுகள் எனும் இணைய விளம்பரங்களை மோசடிக்காரர்கள் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர், ஜோகூர் அரசாங்கங்கள் இணைந்து வீடு வாங்குவதற்கு மானியம் வழங்குவதாகப் பொய்த் தகவலை அந்த விளம்பரங்கள் கொண்டுள்ளதாக வியாழக்கிழமை (செப்டம்பர் 4) காவல்துறை கூறியது.
விளம்பரங்களில் குறிப்பிடப்பட்ட விவரங்களை நம்பி விண்ணப்பம் செய்ய விரும்புவோருக்காக விளம்பரங்களில் இணைப்புகள் இடம்பெற்றிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இணைப்புகளை அழுத்தினால் வாட்ஸ்அப் தகவல் தளத்துக்கு அவை கொண்டு செல்லும்.
இதையடுத்து, அத்தளம் வாயிலாக மோசடிக்காரர்கள் தொடர்புகொள்வதாகக் காவல்துறை எச்சரித்தது.
விண்ணப்பம் செய்பவர்களின் அடையாள அட்டை எண், முகவரி, மின்னஞ்சல் முகவரி போன்ற தனிப்பட்ட விவரங்களைப் பெறும் நோக்குடன் மோசடிக்காரர்கள் அவர்களுக்கு இன்னொரு இணைப்பை அனுப்பிவைப்பர் என்று அதிகாரிகள் கூறினர்.
சட்ட, முத்திரை வரிகளுக்காகப் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறி சிலரிடமிருந்து மோசடிக்காரர்கள் இணையப் பணப் பரிவர்த்தனை மூலம் பணம் பறித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
சிலரிடமிருந்து அடையாளம் தெரியாதோர் பணத்தை நேரடியாகப் பெற்றுக்கொண்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.
சிங்கப்பூர் மற்றும் மலேசியப் பிரதமர்களின் கையொப்பம் போல கையெழுத்திடப்பட்ட ஆவணம் ஒன்றும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

