தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வலுவிழந்த ஐநாவால் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு ஆபத்து: விவியன்

2 mins read
f2ece84b-67e6-4d2a-94e2-b3708c289d42
ஐநா பொதுச் சபையின் நடப்பு 80ஆம் ஆண்டுக் கூட்டத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 27) வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் உரையாற்றினார். - படம்: இபிஏ

வலுவிழந்த ஐநா உலக நாடுகள் அமைப்பு சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளுக்கு ஆபத்தானது.

ஏனெனில், அந்த அமைப்பில்தான் 193 நாடுகள் பிரதிநித்துவம் பெற்றிருப்பதுடன் ஒன்றோடு ஒன்று பிரச்சினைகள் குறித்து கூடிப் பேச முடியும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறினார்.

போர், வர்த்தகப் பதற்றம், வானிலை பற்றிய பிரச்சினைகள் உலகைப் பாதிக்கும்போது பன்னாட்டு அமைப்புகள் அவசியம் தேவை என்று டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

இதில் சிறிய நாடுகள் மற்ற நாடுகளுக்குப் பாலமாக அமைவதுடன் அனைத்துலகச் சட்டத்தை நிலைநாட்ட உதவலாம் என்று திரு விவியன் ஐநா பொதுச் சபைக் கூட்ட முடிவில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) தெரிவித்தார்.

உலகில் பதற்றம், கருத்து வேறுபாடுகள் ஆகியவை இருந்தபோதும் அனைத்து நாடுகளும் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள ஒரே அமைப்பு ஐநா என்று தெளிவுபடுத்தினார்.

“உறுப்பு நாடுகளுக்கு இடையே நல்லெண்ணம், முதிர்ச்சி ஆகியவை இருந்தால் சிக்கலான பிரச்சினைகளில்கூட பயனுள்ள கலந்துரையாடல் இருக்க வழியுண்டு. இந்த அமைப்பில் முறிவு ஏற்படும் அபாயம் உள்ளது என்றபோதும் இது ஒன்றுதான் அனைத்து நாடுகளையும் கொண்ட அமைப்பு என்பதால் இதைப் பயன்படுத்திக்கொண்டு நாடுகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்புபடுத்திக் கொள்வதற்கு நாம் உதவ வேண்டும்,” என்று டாக்டர் விவியன் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய மூன்று முக்கியப் பிரச்சினைகள் உருவெடுத்துள்ளதாகக் கூறினார் டாக்டர் விவியன். போரும் அமைதியும், பொருளியல் வளர்ச்சி - தாக்குப்பிடிக்கக்கூடிய, நீடித்த வளர்ச்சி ஆகியவற்றுடன் உலக நாடுகளுக்குப் பொதுப் பிரச்சினைகளான பருவநிலை மாற்றம், கொள்ளைநோய், செயற்கை நுண்ணறிவு போன்றவையும் சேர்ந்துள்ளதாக அமைச்சர் விவியன் சுட்டினார்.

சிங்கப்பூர் ஒரு சிறிய நாடு என்றபோதும் அது ஐநா அமைப்பில் துடிப்புடன் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

மற்ற நாடுகளுக்குப் பாலமாகவும் பல பிரச்சினைகளில் ஒருங்கிணைப்பு நாடாகவும் செயல்பட்டுள்ளதாக டாக்டர் விவியன் பெருமிதத்துடன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்