சாலை வரி காலாவதியான ‘ஃபோர்ட் மஸ்டேங்’ காரை வாடகைக்கு எடுத்து மலேசியாவில் ஓட்டிய சிங்கப்பூர் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த 40 வயதுப் பெண், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மிடல் ரிங் சாலை 2ல், சனிக்கிழமை (நவம்பர் 29) இரவு 7.21 மணி அளவில் பிடிபட்டார்.
சாலையில் சென்றுகொண்டிருந்த காரை மலேசிய அதிகாரிகள் நிறுத்தினர்.
அவர்கள் சோதனையிட்டதில் அந்தக் காருக்குக் காப்புறுதித் திட்டம் இல்லை என்றும் சாலை வரி காலாவதியாகிவிட்டது என்றும் தெரியவந்தது.
காரின் காப்புறுதித் திட்டம் நவம்பர் மாதம் 13ஆம் தேதியன்று காலாவதியானதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தக் காரை கார் வாடகை நிறுவனத்திடமிருந்து ஒருநாளுக்கு அப்பெண் வாடகைக்கு எடுத்ததாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் சாலைப் போக்குவரத்துத் துறை பொதுமக்களின் புகார்களைத் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், மலேசிய சாலைகளில் செல்லும் அனைத்து வாகனங்களும் நாட்டின் சாலைப் போக்குவரத்துச் சட்டங்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதில் உறுதியாக இருப்பதாகவும் அத்துறையின் இயக்குநர் குறிப்பிட்டார்.

