தரைவீட்டில் 79 நாய்கள் வைத்திருந்த 50 வயது ஜூலியா நிக்கோல் மோசுக்குப் புதன்கிழமையன்று $21,500 அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதம் செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு மாதம், நான்கு வாரங்கள், 24 நாள்களை ஜூலியா சிறையில் கழிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிங்கப்பூரில் தரைவீடுகளில் மூன்று நாய்கள் மட்டுமே வளர்க்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைத் தாண்டி 26 மடங்கு அதிகமான நாய்களை அவர் வளர்த்து வந்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி நிலவரப்படி, 78 ‘பூடில்ஸ்’ இன நாய்களுக்கும் ஒரு ‘கோல்டன் ரெட்ரீவர்’ இன நாய்க்கும் ஜூலியா உரிமம் பெறவில்லை என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 71 நாய்களுக்கு நுண்சில்லுகளையும் அவர் பொருத்தவில்லை என அவை கூறுகின்றன.
உரிமம் பெறாத நாய்களை வைத்திருந்தது, மூன்றுக்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகளைச் சட்டவிரோதமாக வீட்டில் வளர்த்தது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டிருந்தன.
தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஜூலியா நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

