தாய்லாந்தில் நடைபெற்றுவரும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டித் தொடரில் பெண்கள் வலைப்பந்து இறுதிப் போட்டியில் சிங்கப்பூரும் மலேசியாவும் புதன்கிழமை (டிசம்பர் 17) சந்தித்தன.
சிங்கப்பூர், 52க்கு 49 என்று மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் மலேசியாவிடம் தோல்வியுற்றது. அதனால் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து இரண்டாம் நிலையில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றது.
‘வன்டாஸ்’ என்ற செல்லப்பெயரால் அழைக்கப்படும் சிங்கப்பூரின் பெண்கள் வலைப்பந்துக் குழு, கடந்த 2015ஆம் ஆண்டு கடைசியாக இதே போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றது.
உலகத் தரவரிசையில் 24ஆம் நிலையில் உள்ள சிங்கப்பூர், 33ஆம் நிலையில் இருக்கும் மலேசியக் குழுவை தகுதிச் சுற்றில் வெற்றிகொண்டாலும் இறுதிப் போட்டியில் அதனை மீண்டும் வெல்ல முடியவில்லை.
இறுதியில் ‘டீம் நிலா’ என்றழைக்கப்படும் ஊதா நிறச் சீருடையில் போட்டியிட்ட மலேசியப் பெண்கள், ‘சன்டனயிங்யோங்’ அரங்கில் குழுமியிருந்த அவர்களின் ஆதரவாளர்கள் எழுப்பிய ஆரவாரத்தோடு தங்கம் வென்று சாதனை படைத்தனர்.
தென்கிழக்காசிய போட்டிகளில் வலைப்பந்துக்கான இறுதிப் போட்டியில் இவ்வாண்டையும் சேர்த்து, இதுவரை சிங்கப்பூரும் மலேசியாவும் மொத்தம் ஐந்து முறை மோதியுள்ளன.
2015ஆம் ஆண்டைத் தவிர்த்து, 2001, 2017, 2019, 2025 ஆகிய நான்கு ஆண்டுகளில் மலேசியாவிடம் சிங்கப்பூர் தொடர்ந்து தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தையே பெற்றுள்ளது.

