தோல் நிறத்தைக் காட்டி ஒருவரை சமூகத்தினர் பாரபட்சத்துடன் நடத்துவதை 'நிறபேதம்' என்போம். இனவாதம் வெளிப்படையாகத் தெரிவதுபோல் நிறபேதம் தெரிவதில்லை. ஆனால் திரைப்படங்கள், விளம்பரங்கள், பாடல் வரிகள், சமூக ஊடகங்கள் எனப் பல்வேறு தளங்களிலும் கறுப்பைவிட வெள்ளைதான் அழகு என்ற போதனை மறைந்துள்ளதை உணர முடிகிறது.
இது குறித்து தமிழ் முரசு ஆராய்கிறது.
நாடுகள் வளர்ச்சி அடைந்தாலும் நிற பேதத்தை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. இவ்வாண்டு மார்ச் மாதம் 'வேக்அப் சிங்கப்பூர்' ஊடகப்பக்கத்தில் வெளியான ஒரு செய்தியை எடுத்துக்கொள்வோம். இந்திய 'மாடல்' அழகி வேண்டும் என விளம்பர நிறுவனம் ஒன்று விளம்பரம் செய்திருந்தது. அதற்கான நேர்காணலில் நேஹா என்ற விளம்பர அழகி இணையத்தின் வழியாக கலந்துகொண்டார். ஆனால், நேஹா தகுதிஅற்றவர் எனத் தெரிவிக்கப்பட்டது. காரணம், அவரின் தோல் இன்னும் சற்று வெளுப்பாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டதாம்.
இதுபோன்ற சம்பவங்களைப் பற்றி படிக்கும்போது சிங்கப்பூரிலும் 'நிறபேதம்' உள்ளது என்பதை உணர முடிகிறது.
2021ஆம் ஆண்டின் 'பெங்காலி' மொழிக்கான கேம்பிரிட்ஜ் 'ஓ' நிலைத் தேர்வுத்தாளில் 'அவளுக்குக் கறுத்த தோல் இருந்தும் அழகாக இருந்தாள்' என்ற வாக்கியம் இடம்பெற்றிருந்தது. கறுத்த தோல் இருப்பவர் அழகாக இருப்பது அரிது என இந்த வாக்கியம் பொருள்படுவதாக அமைந்துவிட்டது.
கடந்த சில ஆண்டுகளாகவே தென் கிழக்காசிய நாடுகளில் வெளுப்பான தோற்றம், பளபளப்பான தோல் போன்றவற்றில் ஆர்வமும் ஈடுபாடும் அதிகரித்து வருவதாக 2019ல் வெளிவந்த ஓர் ஆய்வுக் கட்டுரை எடுத்துரைத்துள்ளது. 2021ஆம் ஆண்டு தேசிய பல்கலைக்கழக மாணவர்களுடன் நடத்தப்பட்ட ஆய்வின்படி ஆசிய சூழலிலும் தோல் நிறப்பாகுபாடு பரவலாகக் காணப் படுகிறது என்னும் கருத்து வெளிப்பட்டது.
ஊடகங்களின் தாக்கம்
'சிவாஜி' திரைப்படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அதில் நாயகனின் தோல் நிறத்தை ஒரு காரணமாகக் காட்டி கதா நாயகி அவரின் காதலை நிராகரித்துவிடுவார். அதன் பின்னர், எப்படியாவது தம் தோலை வெளுப்பாக்க கதாநாயகன் வெவ்வேறு அழகு பராமரிப்பு வழிகளை நாடுவதாகக் காண்பிக்கப்படும். 'அங்கவை', 'சங்கவை' எனப் பெயர் கொண்ட இரு கறுத்த நிறமுடைய பெண்கள் ஒரு காட்சியில் தோன்றுவர். நகைச்சுவைக்காக சில காட்சிகளும் வசனங்களும் திரைப்படத்தில் சேர்க்கப்பட்டிருந்தாலும் மறைமுகமான நிறபேதம் அதில் புதைந்துள்ளது.
திரைப்படத்தில் இடம்பெறும் சித்திரிப்பும் வசனங்களும்தான் இதற்கு மிகப்பெரிய காரணம் என்று கூறுகிறார் 'யுனைடெட் வுமன் சிங்கப்பூர்' நிறுவனத்தில் திட்ட இணை அதிகாரியாகப் பணிபுரியும் பிரியா ரவி, 25.
தொலைக்காட்சி நாடகங்களிலும் இந்த நிறபேதத்தை உணர்ந்திருப்போம். 'சுந்தரி' என்ற தொடர் நாடகத்தில் கறுத்த நிறப் பெண்ணைக் கதாநாயகியாகப் பார்க்கிறோம். ஆனால், அந்தத் தொடரின் கருப்பொருளாக அவரது கறுத்த தோலும் அதனால் ஏற்படும் சவால்களும்தான் உள்ளது.
கறுத்த தோல் என்பது இயல்பான ஒன்றாக இருக்க, அதைத் தொலைக்காட்சியிலும் நாடகங்களிலும் இயல்பானதாக சித்திரிக்க வேண்டியது அவசியம் என்று ஜெயசுதா சமுத்திரன், 31, கூறுகிறார்.
அனைத்துலக 'பிராண்ட்' மேலாளராகப் பணிபுரியும் இவர், கறுப்பாக இருந்தாலும் களையாக இருக்கிறார் என்று கூறப்படு வதையும் அவர் எதிர்த்தார்.
"சிவப்பு நிறத் தோல் பாராட்டப்படுகிறது, கறுத்த நிறத் தோல் ஒரு குறையாக காட்டப் படுகிறது. ஆனால், அனைத்து தோல் நிறங்களும் அழகானவை என்பதை நாம் உணர்வது முக்கியம். நிறபேதத்தைத் திருத்தும் மனப்பான்மை மக்களிடையே ஏற்பட வேண்டும். அதற்கான முயற்சிகள் நம் சமூகத்திலிருந்தே தொடங்க வேண்டும்," என்று கருது கிறார் ஜெயசுதா.
ஆண்களுக்கு கறுப்பு அழகு!
பெண்கள் சந்திக்கும் அதே சவால்களை ஆண்கள் எதிர்நோக்குவதில்லை. 'கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு', 'கருப்புப் பேரழகா' போன்ற பாடல் வரிகள் மூலம் கறு நிறத்தோலும் அழகுதான் என்று நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். ஆனால், இந்தச் சலுகை பெண்களுக்குக் கிடைப்பதில்லை.
தமிழ் சினிமாவின் தாக்கம் இந்த பாகுபாட்டிற்கு வழிவிட்டுள்ளதாக கருதுகிறார் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டில் பயிலும் பிரபுதேவா கிருஷ்ணன், 25.
தமிழ்ப் படங்களில் கறுத்த தோல் நிறம் கொண்ட கதாநாயகிகளைக் காண்பது அரிது, அவர்களின் எண்ணிக்கையும் குறைவு. மறுபக்கம், கறுத்த நிறமுடைய பல கதாநாயகர்கள் கொண்டாடப்படுகின்றனர். வெற்றிபெற்ற பெரும் நாயகர்களாக சித்திரிக்கப் படுகின்றனர் என்பதையும் கவனித்துள்ளதாக பிரபுதேவா குறிப்பிட்டார்.
"இந்தியத் தொலைக்காட்சிகளின் தாக்கம் இந்தியாவில் மட்டுமல்லாமல், சிங்கப்பூரிலும் காணப்படுகிறது. சிங்கப்பூரில் வாழ்ந்தாலும் நம்மில் பலர் சிறுவயதிலிருந்தே இந்தியாவில் தயாரிக்கப்படும் திரைப்படங்களையும் நாடகங்களையும் பாடல்களையும் கண்டும் கேட்டும் வளர்கிறோம். ஆகையால், இவற்றின் தாக்கம் கடல் தாண்டி நம்மையும் வந்தடைகிறது," என்கிறார் பல்கலைக்கழக மாணவி ஷரண்யா, 23.
சிங்கப்பூரில் மாடல் அழகி நேஹாவுக்கு நடந்ததைப் பற்றி அறிய வந்தபோதுதான் அதிர்ச்சி அடைந்ததாக அவர் பகிர்ந்துகொண்டார். இதுபோன்ற செய்திகள் இந்திய பெண்கள் மத்தியில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தலாம் என்று அவர் சுட்டினார்.
"என் கறுத்த தோலைப் பற்றி குடும்ப உறுப்பினர்கள் பேசியிருக்கிறார்கள். என்னைவிட வெளுப்பாக இருக்கும் மற்ற உறவினர்களுடன் ஒப்பிட்டும் இருக்கிறார்கள். நான் அழகாகத்தான் இருக்கிறேன் என்ற எண்ணம் எனக்கு இருந்தாலும் இதுபோன்ற பேச்சு சில சமயம் என் மனதைப் பாதிக்கிறது.
"ஒருவரின் பண்புகளே ஒருவரின் அழகைத் தீர்மானிக்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்," என்றார் ஆய்வு அதிகாரி நூருல் ஃபர்சானா, 24.
பெண்கள் சிலர் தங்கள் தோல் நிறத்தை வெண்மையாக்கும் முக ஒப்பனைப் பொருள் களையும் சமூக ஊடக வடிப்பான்களையும் (filter) அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.
சமூக ஊடகங்களில் சித்திரிக்கப்படும் அழகுத் தரநிலையைப் பின்பற்ற வேண்டும் என்ற ஆசை பலரிடம் உண்டு என்றும், அதற்கு ஏற்றவாறு தங்கள் தோல் நிறமும் தோற்றமும் இல்லாத வேளையில் பலரும் வருத்தமடைகிறார்கள் என்றும் கூறினார் 23 வயது காமினி சுப்ரமணியம்.
"சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்தை பலர் உணர்கின்றனர் என்பதை நான் கண்கூடாகப் பார்க்கிறேன்.
ஆனால் என் தோற்றத்தில் நான் திருப்தி கொள்கிறேன், பெருமை கொள்கிறேன். இந்த உணர்வே தன்னம்பிக்கை வளர்வதற்கு முக்கியம்," என்று காமினி பகிர்ந்துகொண்டார்.
சமூக ஊடகங்களின் வருகையால் நமது தோல் நிறத்தையும் தோற்றத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் உதிக்கிறது. இது ஆரோக்கியமானதல்ல என்று மனநல உளவியலாளர் திருமதி புனிதா குணசேகரன், 38 கூறு கிறார்.
அழகா இருப்பதை உணர்ந்து அதன் மூலம் ஒருவர் தன்னம்பிக்கை பெறுவது சிறப்பு என்றாலும் ஒருவர் தம்மிடம் உள்ள குறைநிறைகளை ஏற்றுக்கொண்டு அதில் இன்பம் காண்பதற்கும் சமூகத் தரநிலைக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்வதற்கும் இடையே ஒரு சமநிலை காண்பது நல்லதோர் ஆரம்பம் என்று கருதுகிறார் புனிதா.
"அதிகமான முக ஒப்பனை அணிந்துகொண்டு வெளியே செல்வதைக் குறைப்பது, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை விட்டுவிட்டு, நமக்குப் பிடித்த நிறத்தில் ஆடை அணிவது போன்ற சிறிய செயல்களும் ஒரு நல்ல தொடக்கம்தான். அதனால் உணர்வுரீதியாகவும் உடல்ரீதியாகவும் ஆரோக்கியத்தையும் தன்னம்பிக்கையையும் ஒருவர் வளர்த்துக்கொள்ள இயலும்," என்று இவர் குறிப்பிடுகிறார்.
தற்போதைய தலைமுறையினர் பலர், சமூக ஊடகங்கள் சித்திரிக்கும் தோல் நிறம், தோற்றம் போன்ற அழகுத் தரநிலைகளின் அடிப்படையில் தங்களது வாழ்க்கைத் துணையைத் தேடுகிறார்கள் என்பதையும் புனிதா கவனித்துள்ளார்.
தங்கள் வாழ்க்கைத் துணை எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை சமூக ஊடகங்கள் செதுக்குகின்றன என்பதையும் உணர்ந்துள்ளார் இவர்.
"அத்தாக்கத்திலிருந்து தப்பிப்பது கடினம் என்றாலும் இதுபோன்ற முடிவுகளை எடுக்கும் வேளையில் நம் முக்கியத் தேவை களைப் பார்ப்பது அவசியம்.
தோலை வெளுப்பாக்கும் பராமரிப்பு, சிகிச்சை முறைகளைப் பலரும் நாடுகின்றனர். 'ஸ்கின் பிளீச்சிங்' (skin bleaching) எனத் தோலை வெளுப்பாக்கும் பராமரிப்புச் சேவை, அழகு நிலையங்களில் வழங்கப் படுகிறது. தேக்காவில் அழகுப் பராமரிப்பு சேவை வழங்கும் கடைகளிலும் இந்தச் சேவை உண்டு.
அதுமட்டுமா, தோல் நிறத்தை சிவக்கச் செய்யும் 'சோப்பு', திரவம், 'கிரீம்' போன்ற அழகுப் பராமரிப்புப் பொருள்கள் விற்கப் படுகின்றன. நிறபேதத்தை ஊக்குவிக்கும் வகையில் இதுபோன்ற பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் காரணமாகி விட்டன.
புகழ்பெற்ற நிறுவனமான 'இந்துஸ்தான் யூனிலிவர்' தயாரிக்கும் 'ஃபேர் அண்ட் லவ்லி அழகுப் பராமரிப்பு 'கிரிம்' விளம்பரங்களில் கறுப்பு நிறத்தோல் கொண்ட பெண்கள் அழகு குறைந்தவர்கள் என்றே பல வருடங்களாக சித்திரிக்கப்பட்டு வருகிறது. இது ஒரு சர்ச்சையாக மாறியபோது, 'கிளோ அண்ட் லவ்லி' என்று பெயர் மாற்றப்பட்டது.
ஒப்பனைப் பொருள்கள் வெகு காலமாகவே சிவந்த தோல் கொண்டவர்களுக்கு ஏற்றவாறே தயாரிக்கப்பட்டு வருகின்றன. வேறு வழி இல்லாமல் இதை வாங்கிப் பயன் படுத்தும் கறுத்த தோலுடையோரின் தோற்றம் அவர்களுக்குப் பிடித்தவாறு அமைவது இதில்லை.
தன் நிறத்திற்குத் தகுந்த முக ஒப்பனைப் பொருளைக் கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது என்றும் அவ்வாறு ஒன்றைக் கண்டுபிடித்தாலும் அவை அதிகம் விற்கப்படாமல் மீட்டுக்கொள்ளப்படுகிறது என்றும் கூறினார் 'கெல்திய' ஒப்பனை நிறுவனத்தின் உரிமையாளர் சத்யபிரியா, 30.
சற்று கறுத்த நிறத் தோலுடைய விளம்பர அழகிகளைப் பயன்படுத்துவதன் மூலம் சமூக ஊடகங்களில் கருமை நிறப் பெண் களிடமிருந்து நல்ல வரவேற்பைத் தாம் பெற்று வருவதாகக் கூறினார் சத்யபிரியா.

