செய்தித்தாள் வளர்ச்சிக்கு வித்திடும் சமூகம்

செய்தி நிறுவனங்கள் அச்சுப்பிரதியிடும் வழக்கிலிருந்து விலகி மின்னிலக்க வடிவில் செய்திகளை வழங்கத் தொடங்கிவிட்டன.

இன்றைய நவீன யுகத்தில் இது தேவைப்படும் ஒரு மாற்றமாகவும் உள்ளது. இந்த மின்னிலக்கப் பயணத்தைத் தொடங்கியுள்ள ‘தமிழ் முரசு’ நாளிதழ், தனது 88வது ஆண்டு நிறைவை அண்மையில் கொண்டாடியது. சிங்கப்பூரின் ஒரே தமிழ் பத்திரிகையான தமிழ் முரசைப் படித்துப் பயன்பெறும் வாசகர்கள், தங்கள் அனுபவங்களையும் வாழ்த்துகளையும் எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்துகொள்கின்றனர்.

இளையர் தொடர்பு வட்டத்துக்கு தமிழ் முரசு

பரதன் வெங்கடேசன், அவர் தங்கை நித்யா, தங்களின் தாத்தா நா. ஆண்டியப்பனுடன் தமிழ் முரசு கட்டுரை ஒன்றைக் குறித்துக் கலந்துரையாடுகின்றனர். படம்: கி.ஜனார்த்தனன்

வாடிக்கையாளர் சேவைத்துறை அதிகாரியாகப் பணியாற்றும் பரதன் வெங்கடேசன், 25, காற்பந்து ரசிகரும்கூட. தமது வாழ்க்கைத் தொழிலில் எப்படி மேம்படவேண்டும் என்ற சிந்தனைத் தேடலில் இருப்பவர்.

காற்பந்து தொடர்பான செய்திகளைப் பல்வேறு தளங்களில் படித்தாலும் தமிழில் அவற்றை வாசிப்பது மாறுபட்ட அனுபவம் என்றார் அவர்.

“ஆங்கிலச் செய்தியில் தகவலைத் தெரிந்துகொள்வேன். அந்தத் தகவல்களை உணர்வுகளுடன் கலந்து பரிமாறுகிறது தமிழ் முரசின் விளையாட்டுப் பக்கம்,” என்று அவர் கூறினார்.

“விளையாட்டுச் செய்திகளில் தமிழ் முரசு கையாளும் சொல் பயன்பாடு பொதுவாகவே என்னைக் கவர்ந்துள்ளது. காற்பந்து, கிரிக்கெட் ஆட்டங்களை நான் காண இயலாதபோது தமிழ் முரசின் விளையாட்டுப் பக்கத்தைப் படிப்பேன். கட்டுரை பிடித்திருந்தால் அது தொடர்பான காணொளிகளைச் சமூக ஊடகங்களில் தேடிப் பார்ப்பேன்,” என்றார்.

இத்துடன் ‘இளையர் முரசு’ பக்கத்தில் இடம்பெறும் செய்திகள் தம்மையொத்த வயதினரைக் கவர்வதாக திரு பரதனும் அவரின் தங்கை குமாரி நித்யாவும் கூறினர்.

“எங்களுக்கு விருப்பமான அல்லது எங்கள் துறைகளுடன் தொடர்புடைய செய்திகளை வீட்டில் இருக்கும் பெரியவர்கள் செய்தித்தாளில் முதலில் படிக்க நேர்ந்தால் அது பற்றி எங்களிடம் கூறுவர்,” என்று திரு பரதன் கூறினார்.

வாசகர்களை வாடிக்கையாளர்களாக மட்டும் கருதாமல் சிங்கப்பூர்த் தமிழர்களின் முன்னேற்ற இயக்கம் எனத் திகழும் தமிழ் முரசு, வாசகர்களின் தொடர்பு வட்டத்தை அதிகரித்து வாழ்க்கையில் வெற்றிபெற கைகொடுப்பதில் பெருமை கொள்கிறது.

தாதியாகப் பணியாற்றும் குமாரி நித்யா, 22, தாதியர் பற்றியும் சுகாதாரத் துறை பற்றியும் உள்ள கட்டுரைகளைப் படிப்பதில் ஆர்வம் அதிகமெனக் கூறினார்.

தமிழ், ஆங்கில செய்தித்தாள்களை வாசிக்கும் பழக்கம், இளம் வயதிலிருந்தே வீட்டிலுள்ள பெரியவர்களால் விதைக்கப்பட்டது என்றார்.

முன்னாள் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய தங்கள் தாத்தா நா. ஆண்டியப்பனும் வீட்டில் உள்ள பெரியவர்களும் செய்திகளைப் படிப்பதுடன் அதுபற்றியும் பேசுவார்கள்.

வீட்டில் பெரியவர்கள் காட்டிய முன்னுதாரணம் குமாரி நித்யாவைச் செய்தித்தாள் வாசிக்கத் தூண்டியது. ஒவ்வொரு நாளும் தாத்தா ஆண்டியப்பன், நாற்காலியில் அமர்ந்து செய்தித்தாளை விரித்துப் படிப்பதைப் பக்கத்தில் அமர்ந்து பார்த்த பேத்தி நித்யா, பத்து வயது முதல் தாமும் கையில் எடுத்துப் படிக்க ஆரம்பித்தார்.

தமிழ் முரசு வாசிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் அச்சுப்பிரதிகளில் எழுத்துப்பிழைகள் அதிகம் இருந்ததாகவும் இப்போது மிகவும் குறைந்துள்ளதாகவும் திரு ஆண்டியப்பன் கூறினார்.

ஒரு சில இடங்களில் வாக்கியம் அமைத்தல் மேம்படலாம் என்று கூறிய அவர், வானொலியைக் காட்டிலும் எளிமையான வாசகங்களை எழுத்துச் செய்திகள் பயன்படுத்துவது சிறந்தது என்றார்.

மின்னிலக்க உலகின் எதிர்பார்ப்பு

செய்திகளை எளிதில் அறிந்திடும் வாய்ப்பை அச்சுப்பிரதியைக் காட்டிலும் திறன்பேசியே அதிகம் வழங்குகிறது. இருந்தபோதும், மின்னிலக்க உலகில் தமிழ் முரசு அதன் செயலி, சமூக ஊடகப் பக்கங்கள், இணையத்தளம் ஆகியவற்றின் மூலம் வெற்றிநடை போட்டுவருகிறது.

கலைச்சொற்களைச் சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்துவதுடன் மாணவர்களின் மொழி ஆற்றலையும் வளர்க்க வல்லதாக தமிழ் முரசு தொன்றுதொட்டு திகழ்ந்து வருகிறது.

இதனால் தமிழ் முரசு மின்னிலக்க வடிவிலும் அச்சு வடிவிலும் தொடர்ந்து இயங்குவதை இளையர்கள் விரும்புகின்றனர்.

திறன்பேசிப் பயன்பாடு பலவகை என்றாலும் அச்சுப்பிரதி படிப்பதற்கு மட்டுமே. எனவே, படிப்பவரின் கவனத்தை ஒருமுகப்படுத்தும் தளமாக அச்சுப்பிரதி செயல்படுவதாக திரு பரதன் குறிப்பிட்டார்.

அச்சுப்பிரதியை இன்றைய இளையர்கள் நிராகரிப்பர் என்ற கருத்து தவறானது எனச் சுட்டிய அவர், பொது இடங்களிலும் போக்குவரத்திலும் இளையர்கள் அச்சுநூல்களை இன்றும் படிப்பதைப் பற்றி பகிர்ந்தார்.

ஏழு ஆண்டுகள் மலேசிய தமிழ்ப் பத்திரிகைகளில் வேலைசெய்து 1983ல் சிங்கப்பூர் வந்து வானொலி, தொலைக்காட்சியின் தமிழ்ச் செய்திப் பிரிவில் பணியாற்றிய திரு ஆண்டியப்பன், பத்திரிக்கையின் தரம் காலப்போக்கில் உயர்ந்துள்ளதாகக் கூறினார்.

88 ஆண்டுகள் நிறைவை எட்டிய தமிழ் முரசு, அதன் பணியைச் சிறப்பாகச் செய்து வருவதாகக் கூறும் திரு பரதனும் குமாரி நித்யாவும், மேலும் அதிக மாணவர்கள் திறன்பேசிகளில் மட்டுமின்றி செய்தித்தாளின் அச்சுப்பிரதி மூலமாகவும் வாசிக்க முனைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.

வெற்றிக்கு வழிவகுத்த நாளிதழ்

மாணவி அர்ச்சனாவுடன் (இடக்கோடியில்) தாயார் கவிதா, தந்தை பழனியப்பன், தங்கை ஸ்ரீநிதி. படம்: கி.ஜனார்த்தனன்

மாணவர் முரசு தமது வாசிப்புப் பழக்கத்திற்குக் காரணம் என்று கூறினார் 13 வயது அர்ச்சனா பழனியப்பன்.

பின்னர், பத்து வயது முதல் தமிழ் முரசு பத்திரிகையையும் அர்ச்சனா வாசிக்க ஆரம்பிக்கிறார். புதிய சொற்களைக் காணும்போது அவற்றின் பொருளை அர்ச்சனா பெற்றோரிடம் கேட்டு அல்லது இணையத்தில் தேடி அறிந்துகொள்வார். கற்றவற்றைப் பள்ளிப் பேச்சுப்போட்டிகளிலும் கட்டுரைப்போட்டிகளிலும் பயன்படுத்திப் பலன்பெற்றார்.

அர்ச்சனா வாரத்தில் நான்கு முறை செய்தித்தாள் படிப்பார். இணையத்தில் கவனத்தைச் சிதைக்கும் தகவல்கள் இருப்பதால் அச்சுப்பிரதியில் செய்தி வாசிப்பதை விரும்புவதாக அர்ச்சனா குறிப்பிட்டார்.

“அச்சுப்பிரதியில் செய்திகளை விரிவான வடிவில் வாசித்து அறிந்துகொள்வேன்,” என்று இவர் கூறினார்.

தம் மகள் பள்ளிப்பாடங்களையும் கடந்து கற்கவேண்டும் என விரும்பியதால் செய்தித்தாள் படிக்க ஊக்கம் தந்தார் தந்தை எஸ் பி. பழனியப்பன், 42.

நடப்பு விவகாரங்களைப் பற்றி தெரிந்துகொள்ளும் நல்ல பழக்கத்தை இளம் வயதிலேயே ஊக்குவிக்க தமிழ் முரசு பயன்பட்டதாக திரு பழனியப்பன் கூறினார்.

காரைக்குடியிலிருந்து 15 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குடிபெயர்ந்த இவரின் வாழ்வில் தமிழ் முரசு பத்திரிகை பெரும்பங்காற்றியுள்ளதாகக் கூறினார்.

“தமிழை எனக்கு நன்குக் கற்றுத் தந்தது, தமிழ் முரசு. இப்போது என் மகள்களுக்கும் அதே பத்திரிகை கற்றுத்தருகிறது,” என்றார்.

தமிழ் முரசு தொடர்ந்து பல்லாண்டு காலமாக நிலைத்திருக்கவேண்டும் என விரும்பும் அர்ச்சனா, அச்சுப்பிரதி தொடர்ந்து நிலைத்தால் தன்னைப் போன்ற மாணவர்களுக்குப் பெரிதும் உதவும் என்றார்.

எளியோருக்கும் தெளிவூட்டும் முரசு

சிறு வயதில் வெளிவந்த ஓரிருப் பக்க தமிழ் முரசு கிடைத்தால் உடனே அதை எடுத்துப் படிக்கும் திருமதி பிச்சையம்மா. படம்: கி.ஜனார்த்தனன்

இல்லத்தரசியான பிச்சையம்மா, 85, முதன்முதலாகப் படித்த நாளிதழ், தமிழ் முரசு. ஜப்பானியர் படையெடுப்புக் காலத்திலும் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக் காலத்திலும் சிங்கப்பூரில் நிலவிய பதற்றமிக்க சூழலில் தமிழ்ப் பத்திரிகை இயங்கி வந்ததை நினைவுகூர்ந்தார் இவர்.

உணவுப்பொருள்கள் வாங்குவதற்குப் பணத்தட்டுப்பாடு இருந்த காலகட்டத்தில் திருமதி பிச்சையம்மா தமிழ் முரசை வாங்கிப் படிக்கவில்லை. தாம் வசித்த பகுதியில் பத்திரிகைகள் விற்கும் கடைகள் கூட இல்லை. ஆனால் தாம் குடியிருக்கும் பகுதிகளுக்கு தமிழர்கள் சிலர் வர நேர்ந்தால் அவர்கள் படித்துவந்த பத்திரிகைகளை விட்டுச் செல்வதாகத் திருமதி பிச்சையம்மா கூறினார்.

“அப்போது தமிழ் முரசு ஓரிரு பக்க நாளிதழாகத்தான் இருந்தது. எங்கெல்லாம் தமிழ் முரசைக் காண்கிறேனோ அதை எடுத்துப் படிப்பேன். செய்திகளைச் சின்னஞ்சிறு துணுக்குகளாக அறிந்துகொள்வேன்,” என்று திருமதி பிச்சையம்மா கூறினார். சிங்கப்பூர், இந்தியா உள்பட உலகத்தைப் பற்றிய பொது அறிவு வளர்ந்தது. அத்துடன், தமக்குப் பிடித்தமான பழம்பெரும் திரைநடிகர்களான தியாகராஜ பாகவதர், டி ஆர் மகாலிங்கம் போன்றோரைப் பற்றிய செய்திகளை தமிழ் முரசில் விரும்பிப் படித்ததாகவும் அவர் கூறினார்.

1953ல் நடைபெற்ற இரண்டாம் எலிசெபத் அரசியாரின் முடிசூட்டு விழாவைப் பற்றி தமிழ் முரசில் படித்தது இன்னமும் நினைவில் இருப்பதாகக் கூறினார் திருமதி பிச்சையம்மா. அப்போது அவர் சிங்கப்பூருக்கும் அரசியாக இருந்தவர். “பல ஆண்டுகளுக்குப் பிறகு எலிசபெத் அரசியாரும் அவர் கணவரும் சிங்கப்பூருக்கு வந்திருந்தபோது தமிழ் முரசில் முடிசூட்டு விழா பற்றி படித்தது நினைவுக்கு வந்தது,” என்றார்.

1980களில் அடுக்குமாடி வீடுகளில் வசிக்கத் தொடங்கியபோது தமிழ் முரசு இதழைத் தொடர்ந்து கடைகளில் வாங்கி வந்தார். இன்று நாள்தோறும் இவர் ஒவ்வொரு பக்கத்தையும் வாசிப்பார். திங்கட்கிழமை தோறும் வெளிவரும் மாணவர் முரசு இதழையும் படித்துவிட்டு அண்டை வீட்டுத் தமிழ்ப்பிள்ளைகளுக்கு வாசிக்கக் கற்றுக் கொடுப்பார்.

முன்பைக் காட்டிலும் இப்போதெல்லாம் குற்றச்செயல்களையும் நாட்டு நடப்புகளையும் பற்றி எளிதில் படிக்க முடிவதாகக் குறிப்பிட்டார்.

‘கலன் மாறினாலும் சுவை மாறக்கூடாது’

அக்காலத்து எளிய மக்களின் அறிவுப்பெருக்கத்திற்கு தமிழ் முரசின் அச்சுப்பிரதி பெரும் பங்களித்திருந்ததை உள்ளூர் பழம்பெரும் எழுத்தாளர் மா. இளங்கண்ணன் தெரிவித்தார்.

அரசியல் செய்திகள், சிறுகதைகள், தொடர்கதைகள், கவிதைகள் எனப் பல்வேறு எழுத்துப்படைப்புகளை அக்காலத் தொழிலாளர்கள் சுவைத்துப் படித்ததை நினைவுகூர்ந்தபோது அவரது கண்கள் மலர்ந்தன.

‘தீவலி’ எனும் தம் சிறுகதையை பதிப்பித்து எழுத்தாளராக தாம் உருவாக தமிழ் முரசு நாளிதழ் வாய்ப்பளித்ததாக 2005ல் கலாசார விருது பெற்ற திரு இளங்கண்ணன் கூறினார்.

வாசகர்களின் எழுத்துத்திறமைக்கு மட்டுமின்றி ஓவியக்கலைத்திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பையும் தமிழ்முரசு வழங்கியது. “நிறமில்லாக் கறுப்பு வெள்ளைக் காகிதங்கள். ஒவ்வொரு எழுத்தும் அச்சுகோர்க்கப்பட்டது. ஆனால் படிப்பதற்கு எவ்வளவு சுவையாக இருக்கும்,” என்று கூறினார்.

1950களில் வெளிவந்த தமிழ் முரசைப் படித்த அனுபவங்கள் சுவையாக இருந்ததை நினைவுகூர்ந்த திரு இளங்கண்ணன், மாறிவரும் காலத்தால் மக்களின் ரசனை செல்லரிக்கப்படுவதைக் கண்டு மனம் வருந்துவதாகக் கூறினார். குறிப்பாக, அவரைப் பொறுத்தவரை தமிழக அரசியலிலும் திரைப்படத்துறையிலும் ஏற்பட்டுள்ள சரிவு, தமிழ்ப்பத்திரிகைகளையும் தாக்கியிருப்பதாகக் கூறினார்.

இதற்காக செய்தித்துறை வாளாவிருக்க முடியாது என்று குறிப்பிட்ட திரு இளங்கண்ணன், மக்களின் ரசனையை வளர்க்கும் கலை தமிழ் முரசுக்குத் தொடர்ந்து இருப்பதாகக் கூறினார். ரசனை உருவானால் அச்சுப்பிரதியிலும் செயலியிலும் மக்கள் செய்தி வாசிப்பர், விற்பனையில் பிரச்சினையும் இராது என்றார்.

“மண்சட்டியில் உணவு சமைத்த காலத்திலும் மக்கள் சுவையை எதிர்பார்த்தனர். மின்அடுப்புப் பயன்படுத்தும் நாம், தொழில்நுட்ப வளர்ச்சியால் சுவையை விட்டுக்கொடுப்போமா?”

அனைவரையும் உள்ளடக்கும் பத்திரிகை

பொங்கோல் பிபிடி லாட்ஜ் தங்குவிடுதியில் தமிழ் முரசு நாளிதழைப் படிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள். படம்: லெட்சுமணன் முரளிதரன்

25 ஆண்டு காலமாக சிங்கப்பூரில் பணியாற்றி வரும் லெட்சுமணன் முரளிதரன், 48, தமிழ் முரசு பத்திரிகையை அன்றாடம் படிப்பதாகக் கூறினார்.

பொங்கோல் பிபிடி லாட்ஜிலுள்ள ஓர் அறையில் தாம் படிப்பதுடன் அறையிலுள்ள 10 பேரில் சுமார் மூன்று நான்கு பேருடன் பகிர்ந்து படிப்பார். சில முக்கியக் கட்டுரைகளை வாசிக்குமாறு நண்பர்களிடத்தில் வலியுறுத்தி வருகிறார் இவர்.

காரைக்குடி அருகிலுள்ள கீழச்சிவல்பட்டி என்ற ஊரை பூர்விகமாகக் கொண்ட திரு முரளி, தற்போது மூத்த ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றுகிறார்.

செய்திப் பிரியரான முரளி, தமிழ் முரசின் பலம் அதன் நம்பகத்தன்மை என்று தெரிவித்தார். செய்திகளுடன் தலையங்கக் கட்டுரைகள், இளையர் முரசு போன்றவற்றை விரும்பிப் படிக்கும் இவர், நாள்தோறும் ரூபாய் மதிப்பு, தங்க விலை ஆகிய விவரங்களும் பயனுள்ளதாக இருப்பதாகத் தெரிவித்தார்.

லீ குவான் இயூ உயிர்நீத்தபோது அவரது வாழ்க்கையைப் பற்றி தமிழ் முரசு வெளியிட்ட விரிவான ஒரு பக்கக் கட்டுரையின் இரண்டு பிரதிகளை இன்றும் தாம் வைத்திருப்பதாகக் கூறினார்.

செயலி, இணையத்தளம் ஆகியவை தமிழ் முரசுக்கு நல்லது என்றாலும் தமிழ் முரசின் அச்சுப்பிரதி அவசியம் இருக்கவேண்டிய ஒன்று என திரு முரளி கருதுகிறார்.

“இணையச் செய்திகள் பெரும்பாலும் மேலோட்டமானவை. செய்திகளை ஆழமாகத் தெரிந்துகொள்ள செய்தித்தாள்களை வாசிப்பது அவசியம்,” என்றார்.

பத்திரிகை வாசிக்கும் பழக்கத்தைக் குறைத்துக்கொண்ட ஊழியர்கள், நடப்பு விவகாரங்களை அறிந்திருக்காததைத் தாம் கவனித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

88 ஆண்டுகள் நிறைவடைந்த தமிழ் முரசு பத்திரிகைக்கு நன்றி கூற விரும்பும் திரு முரளி, வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பு தொடர்பான மேலும் பல செய்திகளைக் காண விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!