தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் புதன்கிழமை (டிசம்பர் 17) நடைபெற்ற பெண்கள் தனிநபர் ஃபாயில் பிரிவு வாள்வீச்சு இறுதிப் போட்டியில், தேசிய வாள்வீச்சு வீராங்கனை அமிதா பெர்த்தியர் வாகை சூடி மீண்டும் தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
சக சிங்கப்பூரரான மெக்சின் வோங்கை 15-4 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து பெர்த்தியர் தங்கத்தைக் கைப்பற்றினார்.
டிசம்பர் 15 அன்று 25 வயதை எட்டிய பெர்த்தியர், 2017, 2019ஆம் ஆண்டு போட்டிகளின் வெற்றிக்குப் பிறகு, இப்போது மூன்று தனிநபர் ஃபாயில் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். 2019ல் ஃபாயில் பிரிவில் தங்கம் வென்ற சிங்கப்பூர் குழுவிலும் இவர் அங்கம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் நோட்ரே டேம் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பட்டம் படித்துக்கொண்டிருந்ததால், 2022, 2023 தென்கிழக்காசிய விளையாட்டுகளில் இவர் பஙகேற்கவில்லை.
வோங் தனது அரையிறுதிப் போட்டியிலன் ஜன்னா அல்லிசாவை 15-8 என்ற கணக்கில் தோற்கடித்தார். அதே நேரத்தில் பெர்த்தியர் 8-14 என்ற புள்ளிக்கணக்கில் பின்தங்கிய பிறகு, சமந்தா கைலை 15-14 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தார்.
டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் வியட்னாமின் நுயென் ஃபூக் டெனிடம் 15-5 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்த பின்னர், ஆண்கள் தனிநபர் எபி பிரிவில் சைமன் லீ கூட்டு வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
ஒரு நாள் முன்னதாக, சிங்கப்பூரின் வாள்வீச்சு வீரர்கள் மூன்று வெற்றிகளைப் பெற்றனர். ஜூலியட் ஹெங் (பெண்கள் தனிநபர் சபர் பிரிவு), ரஃபேயல் டான் (ஆண்கள் தனிநபர் ஃபாயில் பிரிவு), எல்லே கோ (பெண்கள் தனிநபர் எபி பிரிவு) ஆகியோர் இந்தப் போட்டிகளில் சிங்கப்பூரின் முதல் மூன்று வாள்வீச்சு தங்கப் பதக்கங்களை வென்றனர்.
2023ஆம் ஆண்டில், சிங்கப்பூர் 12 பிரிவுகளில் ஏழு தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்த வாள்வீச்சு நாடாகத் திகழ்ந்தது. ஆண்கள், பெண்கள் எபி பிரிவுகளிலும் ஃபாயில் தனிநபர் பிரிவிலும் வெற்றி பெற்றது. பெண்கள் எபி மற்றும் ஃபாயில் பிரிவுகளில் சிங்கப்பூர் அணியினர் தங்கத்தையும் ஒரு தனிநபர் சேபர் பிரிவில் தங்கத்தையும் வென்றனர்.

