எதிரணியின் சொந்த கோலால் அர்ஜென்டினா திகில் வெற்றி

எதிரணியின் சொந்த கோலால் அர்ஜென்டினா திகில் வெற்றி

2 mins read
66d1a2e1-18e2-4859-a9d1-034aed840dae
வெற்றியைக் கொண்டாடிய அர்ஜென்டினா வீரர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

மயாமி: உலகக் கிண்ண ஆட்டத்தில் அர்ஜென்டினா திகில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்து ஆடிய கேப் வெர்டே அணியை அது 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

கூடுதல் நேரம் வரை நீடித்த ஆட்டத்தின் 111வது நிமிடத்தில் கேப் வெர்டே அணி வீரர் டினே போர்ஜிஸ் அடித்த சொந்த கோல் நடப்பு வெற்றியாளரான அர்ஜென்டினாவுக்குச் சாதகமாக அமைந்தது.

ஆட்டத்தின் முதல் கோலை லயனல் மெஸ்ஸி போட்டார். தடுப்பாட்ட வீரர்களுக்குப் பின்னாலிருந்து லிசாண்ட்ரோ மார்ட்டினெஸ் அனுப்பிய பந்து மெஸ்ஸியின் கால்களில் பட்டு கோல் ஆனது.

ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் டெராய் டுவார்ட்டே தாழ்வாக அடித்த பந்து கோலாக மாறியதால் ஆட்டம் சமநிலை கண்டது. அதன் பின்னர் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.

கூடுதல் நேரத்தின் முதல் பாதியில் ‘கார்னர் கிக்’ மூலம் லிசாண்ட்ரோ மார்ட்டினெஸ் அடித்த கோலால் ஆட்டம் 2-1 என மாறியது.

103வது நிமிடத்தில், சிட்னி கப்ராவ் பெனால்டி கட்டத்தின் விளிம்பிலிருந்து வளைந்து சென்ற ஓர் அற்புதமான உதை மூலம் கேப் வெர்டேவின் இரண்டாவது கோலை அடித்து, ஆட்டத்தைச் சமன் செய்தார்.

இந்த வெற்றியின்மூலம் உலகக் கிண்ணத்தின் கடைசி 16 சுற்றுக்கான தனது இடத்தை அர்ஜென்டினா உறுதிசெய்துள்ளது. அடுத்த செவ்வாய்க்கிழமை அட்லாண்டாவில் எகிப்துடன் மோதுவதற்கான வாய்ப்பும் உறுதியாகி உள்ளது.

கத்துக்குட்டி அணியான கேப் வெர்டே உலகக் கிண்ண ஆட்டத்தில் முதல்முறை பங்கேற்றாலும் சற்றும் சளைக்காமல் அர்ஜென்டினாவைத் திணறடித்தது என்றே சொல்லலாம்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

பின்தங்கிய நிலையிலிருந்து அந்த அணியினர் இருமுறை மீண்டு வந்தனர். அரங்கிலிருந்த 64,478 பார்வையாளர்களை அவர்களின் ஆட்டம் ஈர்த்தது. இந்தத் தோல்வியின்மூலம் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து கேப் வெர்டே வெளியேறியது.

போட்டியின் 29வது நிமிடத்தில் மெஸ்ஸி இந்தத் தொடரில் தமது ஏழாவது கோலை அடித்தது குறிப்பிடத்தக்கது.

எகிப்து, கொலம்பியா வெற்றி

முன்னதாக, ஆஸ்திரேலியா - எகிப்து அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்ததால் ஆட்டம் பெனால்டி வாய்ப்புகள் முறைக்குச் சென்றது. அதில், எகிப்து 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

பின்னர் நடந்த ஆட்டத்தில் கொலம்பியா 1-0 என்ற கோல் கணக்கில் கானாவைத் தோற்கடித்தது.

இதனையடுத்து, 16 அணிகள் மோதும் மூன்றாம் சுற்றுப் போட்டிகளில் அர்ஜென்டினா - எகிப்து, கொலம்பியா - சுவிட்சர்லாந்து அணிகள் பொருதவிருக்கின்றன.

குறிப்புச் சொற்கள்