தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் மோதவுள்ள ஆர்சனல், ஏசி மிலான், நியூகாசல் யுனைடட் அணிகள்

2 mins read
சிங்கப்பூர்க் காற்பந்து விழாவில் மோதும் ஐரோப்பியக் காற்பந்து அணிகள்
b44c221f-400c-40cb-b0c4-2d8195c2c60a
(இடமிருந்து) முன்னாள் ஆர்சனல் விளையாட்டாளர் பக்காரி சான்யா, முன்னாள் ஏசி மிலான் விளையாட்டாளர் செர்ஜினியோ, முன்னாள் நியூகாசல் விளையாட்டாளர் ‌ஷே கிவன் மூவரும் சிங்கப்பூர்க் காற்பந்து விழாவின் செய்தியாளர் சந்திப்பில். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர்க் காற்பந்து ரசிகர்கள் இன்னும் சில நாள்களில் தங்கள் மனங்கவர்ந்த ஐரோப்பியக் காற்பந்துக் குழுவினரை நேரில் காணலாம்.

ஆர்சனல் எஃப்சி, ஏசி மிலான், நியூகாசல் யுனைடட் ஆகிய முன்னணிக் காற்பந்துக் குழுக்கள் ஜூலை மாதம் சிங்கப்பூர்க் காற்பந்து விழாவில் பங்கேற்கவுள்ளன.

ஜூலை 23ஆம் தேதி ஆர்சனல் எஃப்சி, ஏசி மிலான் அணியுடன் மோதும். ஜூலை 27ஆம் தேதி ஆர்சனல், நியூகாசல் யுனைடட் அணிகள் பொருதவிருக்கின்றன.

இரு ஆட்டங்களும் தேசிய விளையாட்டரங்கில் இரவு 7.30 மணிக்குத் தொடங்கும்.

ஜூலை 27ஆம் தேதி, களமிறங்குமுன் நியூகாசல் விளையாட்டாளர்கள் ஷே கிவன், ‌ஷோலா அமியோபி இருவரையும் ரசிகர்கள் சந்திக்கலாம். மாலை 5 மணி முதல் 6 மணி வரை இடம்பெறும் ரசிகர் சந்திப்புக்குப்பின் தேசிய விளையாட்டரங்கினுள் நுழையலாம்.

ஒவ்வோர் ஆட்டத்துக்கும் நுழைவுச்சீட்டு விலை $108லிருந்து தொடங்குகிறது.

ஜூலை 25ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள ஆர்சனல் எஃப்சி பயிற்சியைப் பொதுமக்கள் காண முடியும். அதற்கான நுழைவுச்சீட்டு விலை $32.

அனைத்து நுழைவுச்சீட்டுகளையும் https://premier.ticketek.com.sg/shows/Show.aspx?sh=SFOF6074 இணையத்தளத்தில் வாங்கலாம்.

ஆர்சனல் அணியின் கில்பெர்ட்டோ சில்வா, பக்காரி சாக்னா, நியூகாசல் யுனைடட் அணியின் ‌ஷே கிவன், ‌ஷோலா அமீபி, ஏசி மிலானின் சர்கினியோ, அலெக்சாண்டர் பாட்டோ ஆகியோர் அவரவர் அணிகள் சிங்கப்பூரில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் கலந்துகொள்வர்.

ஏசி மிலான் ரசிகர்கள் முதன்முறையாகத் தம் விருப்ப அணி சிங்கப்பூரில் விளையாடுவதைக் காணவுள்ளனர். அதனால் ஏசி மிலானின் முதல் அணியின் விளையாட்டாளர்களுடனான ரசிகர் சந்திப்பு ஜூலை 22ஆம் தேதி 313@சமர்செட்டின் நான்காம் மாடியிலுள்ள வெஸ்டன் கார்ப் கடையில் நடைபெறும்.

ஏசி மிலான் பிரபலங்களுடன் தனிப்பட்ட விருந்துகள், பின்னணியில் நடப்பவற்றைக் காண அனுமதி போன்றவற்றை https://premier.ticketek.com.sg/shows/show.aspx?sh=ACMTES25 இணையத்தளத்தில் வாங்கலாம்.

நியூகாசல் யுனைடட் பெர்டாபிஸ் அறநிறுவனத்துடன் இணைந்து ஜூலை 26ஆம் தேதி உணவு நன்கொடை நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.

அதே நாள் இரவு 8 முதல் 10 மணிவரை 313@சமர்செட் வெஸ்டன் கார்ப் கடையில் ரசிகர்கள் ‌ஷே கிவன், ‌ஷோலா அமீபி ஆகியோரைச் சந்திக்கலாம். 70 ஆண்டுகளுக்குப்பின் நியூகாசல் வென்ற கோப்பையுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொள்ளலாம். இச்சந்திப்புக்கு https://surveys.nufc.co.uk/to/GBI0BGE9 இணையத்தளத்தில் பதிவுசெய்யலாம்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப்பின் நியூகாசல் சிங்கப்பூருக்கு வருவது சிறப்பம்சம்.

ஆர்சனல் அணி சிங்கப்பூரில் காற்பந்து மேம்பாட்டுத் திட்டத்தை நடத்தும். அதன்வழி, சிங்கப்பூர், ஹாங்காங், சீனா ஆகிய நாடுகளைச் சார்ந்த இளம் காற்பந்தாளர்கள் தலைசிறந்த விளையாட்டாளர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். இந்த நான்கு நாள் பயிற்சியில் அன்றாடம் 60 முதல் 90 பேர் வரை பங்கேற்பர். அவர்களுக்கு ஆர்சனல் அணியின் ஜூலை 25ஆம் தேதி பயிற்சிக்கும் ஏசி மிலான் போட்டிக்கும் நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படும்.

2025/26க்கான வெளி விளையாட்டுகளுக்கான அணிச் சீருடையையும் ஜூலை 23ஆம் தேதி நடக்கும் போட்டியில் ஆர்சனலும் ஏசி மிலானும் முதன்முறையாக அணியவுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்