அபுதாபி: இவ்வாண்டின் இறுதி ஃபார்முலா ஒன் கார்ப் பந்தயமான அபுதாபி கிராண்ட் பிரீயில் மூன்றாமிடத்தையே பிடிக்க முடிந்தபோதும் முதன்முறையாக ஒட்டுமொத்த வெற்றியாளர் விருதை வென்று இன்பக் கடலில் மூழ்கினார் பிரிட்டனின் லாண்டோ நோரிஸ்.
இரண்டாமிடத்தில் வந்த ரெட் புல் குழுவின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பனைவிட இரண்டு புள்ளிகள் கூடுதலாகப் பெற்றார் நோரிஸ்.
வெர்ஸ்டாப்பன் அபுதாபி பந்தயத்தில் வெற்றி பெற்று, இவ்வாண்டில் தமது எட்டாவது வெற்றியைப் பதிவுசெய்தார்.
மெக்லேரன் குழு வீரர்கள் நோரிஸ், ஆஸ்கார் பியாஸ்ட்ரியைவிடக் கூடுதலாக ஒரு பந்தயத்தில் அவர் வென்றுள்ளார் .
அபுதாபியில் வெர்ஸ்டாப்பன் தொடக்கத்திலிருந்தே வெற்றிமுகத்தில் இருந்தாலும், பரபரப்பான அப்பந்தயத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது மெக்லேரன்.
ஏனெனில், இரண்டாவது இடத்தைப் பிடித்தாலும் தேவைப்பட்டால் நோரிசுக்கு உதவக்கூடிய நிலையில் அவர் இருந்தார்.
எஃப்1 பந்தயத்தில் தனது ஏழாவது பருவத்தின் முடிவில், நோரிஸ் 11வது பிரிட்டிஷ் எஃப் 1 உலக வெற்றியாளரானார்.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டில் நோரிஸ் மெதுவாகத் தொடங்கினாலும், ஆண்டின் பிற்பாதியில் அவர் வலுவாக முன்னேறினார்.
மேலும், 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதலாவது ஒட்டுமொத்த வெற்றியாளர், பந்தயக் கார் நிறுவனம் என இரட்டை விருதுகளை மெக்லேரன் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

