தோஹா: அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்காக நடத்தப்படும் ஆசியக் கிண்ண டி20 கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ அணி பங்ளாதேஷ் ‘ஏ’ அணியிடம் தோல்வியடைந்தது.
வெள்ளிக்கிழமை நடந்த அந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி பல தவறான முடிவுகளை எடுத்தது பேசு பொருளாக மாறியுள்ளது.
முதலில் பந்தடித்த பங்ளாதேஷ் அணி 20 ஓவர்களில் 194 ஓட்டங்களைக் குவித்தது. கடைசி இரண்டு ஓவர்களில் மட்டும் இந்திய பந்துவீச்சாளர்கள் 48 ஓட்டங்களை வழங்கினர்.
19வது ஓவரை பகுதிநேரப் பந்துவீச்சாளர் நமன் தீர் வீசினார். அதில் மட்டும் 28 ஓட்டங்களைப் பங்ளாதேஷ் எடுத்தது. இறுதி ஓவரில் வைஷாக் விஜயகுமார் 20 ஓட்டங்களைக் கொடுத்தார்.
சவாலான இலக்கை விரட்டிய இந்தியாவுக்கு வைபவ் சூர்யவன்ஷி, பிரியான்ஷ் ஆர்யா சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.
3.1 ஓவர்களில் அந்த ஜோடி 50 ஓட்டங்களை விளாசியது. வைபவ் 38 ஓட்டங்களிலும் பிரியான்ஷ் 44 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
அதன்பின்னர் வந்தவர்களும் சீராக ஓட்டங்கள் எடுத்தனர். கடைசி ஓவரில் 16 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில் இந்தியா 15 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆட்டத்தைச் சமநிலையில் முடித்தது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் ‘சூப்பர் ஓவர்’ல் இந்திய அணி வைபவ் மற்றும் பிரியான்ஷ் ஆர்யாவை களமிறக்காமல் ஜித்தேஷ் மற்றும் ரமந்தீப் களமிறக்கியது.
தொடர்புடைய செய்திகள்
ஜித்தேஷ் முதல் பந்திலும் அஸ்த்தோஷ் இரண்டாவது பந்திலும் ஆட்டமிழந்தனர்.
ஓர் ஓட்டம் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய பங்களாதேஷ் அணியும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தது. அடுத்த பந்தைச் சுயாஸ் சர்மா அகலப்பந்தாக வீசக் கிடைத்த ‘ஸ்டம்பிங்’ வாய்ப்பை ஜித்தேஷ் தவறவிட்டார். இதனால் பங்ளாதேஷ் வெற்றிபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) இரவு நடக்கும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் ‘ஏ’ அணியும் பங்ளாதேஷ் ‘ஏ’ அணியும் மோதுகின்றன.

