உச்சகட்டத்தை எட்டியுள்ள எஃப்1; வெற்றியாளர் பட்டத்திற்கு மோதும் மூன்று வீரர்கள்

2 mins read
377387ad-d7c8-478c-9ae7-a0204da599c2
கத்தார் கார் பந்தயத்தில் வெற்றிபெற்ற வெர்ஸ்டாப்பன் (நடுவில்). இரண்டாவது இடத்தில் வந்த ஆஸ்கர் (இடது) , மூன்றாமிடத்தில் வந்த கார்லோஸ் செய்ன்ஸ். - படம்: ஏஎஃப்பி

தோஹா: ‘ஃபார்முலா ஒன்’ (எஃப்1) கார்ப் பந்தயத் தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. உலக வெற்றியாளர் பட்டத்தை வெல்ல மூன்று வீரர்களுக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது.

பருவத்தின் கடைசி பந்தயம் இந்த வார இறுதியில் (டிசம்பர் 7) அபுதாபியில் நடக்கவுள்ளது. இரவு நேரப் பந்தயம் என்பதால் ரசிகர்கள் அதிக உற்சாகத்தில் உள்ளனர்.

இதற்கு முன்னர் 2010ஆம் ஆண்டுதான் மூன்று வீரர்கள் இறுதிப் பந்தயத்தில் வெற்றியாளர் பட்டத்திற்குப் போட்டியிட்டனர். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு அதுபோன்ற சூழ்நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது.

மெக்லேரன் அணியின் லேண்டோ நாரிஸ், 408 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் 396 புள்ளிகளுடன் ரெட்புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் உள்ளார்.

மூன்றாவது இடத்தில் 392 புள்ளிகளுடன் மெக்லேரன் அணியின் ஆஸ்கர் பியாஸ்ட்ரி இருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் லேண்டோ அல்லது ஆஸ்கர்தான் கிண்ணத்தை வெல்வார் என்று பேசப்பட்டது. ஆனால், வெர்ஸ்டாப்பன் சிறப்பாகச் செயல்பட்டு இறுதிப் பந்தயம்வரை கடும்போட்டி கொடுத்து வருகிறார்.

தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக உலக வெற்றியாளர் பட்டத்தைக் கைப்பற்றிய வெர்ஸ்டாப்பன் ஐந்தாவது முறையாக வாகை சூடக் காத்திருக்கிறார்.

லேண்டோ மற்றும் ஆஸ்கர் இதுவரை உலக வெற்றியாளர் பட்டத்தை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பருவத்தின் தொடக்கம் முதல் சிறப்பாகச் செயல்பட்டு வந்த மெக்லேரன் அணி கடைசி சில பந்தயங்களில் தவறான முடிவுகளை எடுத்துச் சிக்கலில் மாட்டிக்கொண்டது.

கத்தாரிலும் தடுமாறிய மெக்லேரன்

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) இரவு கத்தாரில் நடந்த பந்தயத்திலும் தவறான உத்திகளால் மெக்லேரன் ஓட்டுநர்கள் புள்ளிகளை இழந்தனர்.

பந்தயத்தை முதல் இடத்தில் தொடங்கிய ஆஸ்கர் இரண்டாவது இடத்தில் முடித்தார். லேண்டோ இரண்டாவது இடத்தில் தொடங்கி நான்காவது இடத்தில் முடித்தார். மூன்றாவது இடத்தில் தொடங்கிய வெர்ஸ்டாப்பன் முதலிடத்தில் வந்தார்.

கத்தாரில் கிடைத்த பல வாய்ப்புகளை மெக்லேரன் தவறவிட்டதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

ஐந்தாவது இடத்தில் வந்துகொண்டிருந்த லேண்டோ, பந்தயத்தின் கடைசி நிமிடத்தில் வேகமாகச் செயல்பட்டு நான்காவது இடத்திற்கு முன்னேறியது மட்டுமே ஒரு நல்ல செய்தி.

லேண்டோவுக்கு வாய்ப்பு

வெற்றியாளர் பட்டத்தை வெல்ல லேண்டோவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அபுதாபி பந்தயத்தில் அவர் மூன்றாவது நிலையில் முடித்தாலே போதும். ஆனால் அது சற்று சவாலாக இருக்கும்.

அதேபோல் வெர்ஸ்டாப்பன் பந்தயத்தை முதலிடத்தில் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அவர் முதலிடத்தில் முடித்து லேண்டோ நான்காவது இடத்தில் வந்தால் மட்டுமே வெர்ஸ்டாப்பனுக்கு வெற்றியாளர் பட்டம் கிடைக்கும்.

குறிப்புச் சொற்கள்