சிங்கப்பூர் எஃப்1: குறும்பந்தயத்தை வென்றார் வெர்ஸ்டப்பன்

சிங்கப்பூர் எஃப்1: குறும்பந்தயத்தை வென்றார் வெர்ஸ்டப்பன்

படம்: ராய்ட்டர்ஸ்

10 Oct 2026 - 7:09 pm

2 mins read

சிங்கப்பூர் எஃப்1 இரவுநேரப் பந்தயத்தின் முதல் குறும்பந்தயத்தை (ஸ்பிரின்ட்) ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டப்பன் வென்றார்.

சனிக்கிழமை (அக்டோபர் 10) மாலை 5 மணி அளவில் நடந்த குறும்பந்தயத்தில் பரபரப்புக்குப் பஞ்சமில்லை.

இருபது சுற்றுகள் கொண்ட பந்தயம் தொடங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னர் கனமழை பெய்ததால் போட்டி ஏறக்குறைய 30 நிமிடங்கள் தாமதமானது. 

சாலையில் நீர் ஆங்காங்கே தேங்கியிருந்த காரணத்தால் அதை வடிகட்ட நேரம் எடுத்தது. தாமதத்திற்குப் பிறகு பாதுகாப்பு காரின் முன்னிலையில் பந்தயம் தொடங்கியது.

பந்தயத்தின் தொடக்கத்திலேயே அதிரடியாகச் செயல்பட்டார் இரண்டாவது இடத்தில் இருந்த மெர்சிடிஸ் அணியின் ஜார்ஜ் ரசல். அவர் விரைவாக முதலிடத்திற்கு முன்னேறினார்.

இருப்பினும்,  அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை. சிறிது நேரம் முதலிடத்தில் இருந்த ரசல் திடீரெனத் தடுமாறி தடம் மாறி சாலையோரம் இருந்த தடுப்புகளில் மோதினார். இதனால் ரசல் பந்தயத்தின் தொடக்கத்திலேயே வெளியேறினார்.

அதன் பின்னர் இயந்திரக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பந்தயத்திலிருந்து மேலும் ஒன்பது வீரர்கள் வெளியேறினர்.

பந்தயத்தின் இறுதி நேரத்தில் முறையே நான்காவது, ஐந்தாவது இடங்களில் இருந்த மெக்லேரனின் லேண்டோ நாரிசும், ஆஸ்கர் பியஸ்ட்ரியும் உரசிக்கொண்டனர். இதனால் ஆஸ்கர் பந்தயத்திலிருந்து வெளியேறினார்.

பந்தயத் திடலில் பல நிகழ்வுகள் நடந்தாலும் கவனம் சிதறாமல் வெர்ஸ்டப்பன் தனது முன்னிலையை இறுதிவரை தக்கவைத்தார்.

பந்தயத்தை ஆறாவது இடத்தில் தொடங்கிய ஃபெராரியின் லூயிஸ் ஹேமில்டன் தனது முழு அனுபவத்தையும் பயன்படுத்தி இரண்டாவது இடத்தில் முடித்தார்.

ஃபெராரி அணியின் சார்ல்ஸ் லெக்லர்க் மூன்றாவது இடத்தில் வந்தார். நாரிஸ் எட்டாவது இடத்தில் பந்தயத்தை முடித்தார்.

முதலிடத்தில் முடித்த வெர்ஸ்டப்பனுக்கு எட்டுப் புள்ளிகள் கிடைத்தன. ஹேமில்டனுக்கு ஏழு புள்ளிகளும் சார்ல்சுக்கு ஆறு புள்ளிகளும் கிடைத்தன.

பரிசளிப்பு விழாவில் சிங்கப்பூரின் தடகள வீராங்கனை சாந்தி பெரேரா கலந்துகொண்டார். அவர் வெர்ஸ்டப்பனுக்குப் பரிசு வழங்கினார்.

சிங்கப்பூரின் 17வது இரவுநேர கார் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) இரவு 8 மணிக்குத் தொடங்கவுள்ளது.

குறிப்புச் சொற்கள்
எஃப்1கார்ஃபார்முலா ஒன்சாந்தி பெரேரா