ஃபிஃபா ஆசியான் கிண்ணம்: மலேசியாவிடம் சிங்கப்பூர் தோல்வி

ஃபிஃபா ஆசியான் கிண்ணம்: மலேசியாவிடம் சிங்கப்பூர் தோல்வி

படம்: சிங்கப்பூர்க் காற்பந்துச் சங்கம்

02 Oct 2026 - 11:11 am

2 mins read

பாண்டுங்: ஃபிஃபா ஆசியான் கிண்ணப் போட்டியிலிருந்து சிங்கப்பூர் வெளியேறிவிட்டது. இந்தோனீசியாவின் பாண்டுங் நகரில் வியாழக்கிழமை (அக்டோபர் 1) இரவு நடைபெற்ற ஆட்டத்தில், மலேசியா 6-0 எனும் கோல் எண்ணிக்கையில் சிங்கப்பூரை வெற்றி கண்டது.

பிரேசிலில் பிறந்தவரான பெர்க்சன் மூன்று கோல்களை அடித்தார். ஸ்டூவர்ட் வில்கின், பாவ்லோ ஹோசுவே, சயாகிர் பாஷா ஆகியோரும் கோல் போட்டனர். பயிற்றுவிப்பாளர் கேவின் லீயின்கீழ் சிங்கப்பூர் அணி சந்தித்த மிக மோசமான தோல்வி இது.

மூத்த விளையாட்டாளர்கள் பிரிவில் மலேசியாவிடம் சிங்கப்பூர் பல ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய தோல்வியைக் கண்டுள்ளது. 1978ஆம் ஆண்டு இதே போன்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் மலேசியாவிடம் தோல்வி அடைந்தது. மேலும், ஆசியக் கிண்ணத்துக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், இது சிங்கப்பூர் அணிக்குக் கசப்பான அனுபவமாக அமைந்துள்ளது.

போட்டியின் முடிவைப் பற்றிப் பயிற்றுவிப்பாளர் லீ, செய்தியாளர் கூட்டத்தில் கருத்துரைத்தார்.

“மலேசியாவிற்கு எனது வாழ்த்துகள். அவர்கள் தகுதி பெற முற்றிலும் தகுதியானவர்கள். உண்மையைச் சொன்னால், இது 6-0 எனும் போட்டியாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் நாங்கள் தகுதி பெறுவதற்குப் போதிய முயற்சியை நிச்சயம் செய்யவில்லை,” என்றார் அவர்.

“போட்டியிட விரும்பும் நிலையைப் புரிந்து கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற நாங்கள் இதிலிருந்து கற்றுக்கொண்டு சிந்திக்க வேண்டும்,” என்றும் லீ சொன்னார்.

‘ஏ’ பிரிவில் முதல் நிலையைப் பிடிக்க மலேசியாவுக்குக் கூடுதல் கோல்கள் தேவைப்பட்டன. இருப்பினும் அந்தப் பிரிவில் அதனால் இரண்டாம் இடத்தையே பிடிக்கமுடிந்தது.

ஜகார்த்தாவில் வியாழக்கிழமை இரவு அதே நேரத்தில் நடந்த இன்னோர் ஆட்டத்தில், இந்தோனீசியா 9-2 எனும் கோல் கணக்கில் பங்ளாதே‌ஷை வீழ்த்தியது. அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், ‘பி’ பிரிவில் முதலிடத்தில் வந்த தாய்லாந்தை அது சந்திக்கும்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்மலேசியாகாற்பந்துஆசியான்