கௌகாத்தி: சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியிடம் 2-0 என மண்ணைக் கவ்வி இந்திய அணி தலைக்குனிவைச் சந்தித்தது.
கௌகாத்தியில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ஓட்ட வித்தியாசத்தில் தோற்றுப்போனது. ஓட்ட அடிப்படையில், இந்திய அணியின் ஆக மோசமான தோல்வி இதுதான்.
முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 489 ஓட்டங்களையும் இந்திய அணி 201 ஓட்டங்களையும் எடுத்தன.
இரண்டாவது இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 260 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து, 549 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 140 ஓட்டங்களுக்குச் சுருண்டது.
அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 54 ஓட்டங்களை எடுத்தார்.
தென்னாப்பிரிக்காவின் மார்க்கோ யான்சன் ஆட்டநாயகனாகவும் சைமன் ஹார்மர் தொடர்நாயகனாகவும் தேர்வுசெய்யப்பட்டனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து 12 ஆண்டுகளாகச் சொந்த மண்ணில் வெல்ல முடியாத அணியாகத் திகழ்ந்த இந்திய அணி, கடந்த ஆண்டு நியூசிலாந்திடம் 3-0 எனத் தோற்றது. தற்போது தென்னாப்பிரிக்க அணியிடமும் முழுமையாக அடிபணிந்துவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதனையடுத்து, இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து கௌதம் காம்பீரை நீக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், “அணியில் எனது எதிர்காலம் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமே (பிசிசிஐ) முடிவெடுக்க வேண்டும். எனது பயிற்சியின்கீழ்தான் இங்கிலாந்து அணியில் தொடரைச் சமன்செய்தோம்; வெற்றியாளர் கிண்ணத்தை வென்றோம்,” என்று செய்தியாளர்களிடம் காம்பீர் தெரிவித்தார்.
“தோற்றதற்கு எல்லாருமே பொறுப்பேற்க வேண்டும். அது என்னிடமிருந்து தொடங்குகிறது. நாம் சிறப்பாக விளையாட வேண்டும். 95/1 என்ற நிலையிலிருந்து 122/7 என்ற நிலைக்குச் சென்றதை ஏற்க முடியாது,” என்றும் அவர் சொன்னார்.
காம்பீர் பயிற்றுநராகப் பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி விளையாடிய 18 டெஸ்ட் போட்டிகளில் 10ல் தோல்வி கிட்டியது.
அடுத்ததாக, இந்திய, தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) தொடங்கவிருக்கிறது.

