தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள கபடி விளையாட்டில் பங்கேற்பதற்காக சிங்கப்பூரின் ஆண், பெண் கபடி அணிகள் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) காலை 6.40 மணிக்கு தாய்லாந்துக்குப் புறப்பட்டன.
தாய்லாந்து சென்றுள்ள மொத்தம் 34 பேரில் ஆதரவுக் குழுவினர் அறுவரும் அணியின் 14 உறுப்பினர்களும் அடங்குவர்.
வெற்றியோடு திரும்பி வருமாறு வாழ்த்தி, அணியினரை அவர்களின் குடும்பத்தினரும் நண்பர்களும் சாங்கி விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர். காலை 4 மணியளவிலேயே பரபரப்புத் தொடங்கியது.
குடும்பத்தினர், நண்பர்கள் விளையாட்டாளர்களை வழியனுப்பிய நெகிழ்ச்சியான தருணத்தில், அவர்களுக்குப் பிரியாவிடை கொடுத்தனர்.
போட்டி நடைபெறும்போது கபடி அணியினரை நேரில் ஆதரிக்க, குடும்பத்தினர் சிலர் தாய்லாந்து செல்லவும் உள்ளனர்.
ஆறு பதக்கங்களுக்குக் குறி
அணிக்கு எழுவர் (வழக்கமானது), அணிக்கு ஐவர் (சூப்பர் ஃபைவ்), அணிக்கு மூவர் (மூன்று ஸ்டார்) என இரு அணிகளும் மூன்று பிரிவுகளில் மொத்தம் ஆறு பதக்கங்களுக்காகப் போட்டியிடும்.
டிசம்பர் 11 முதல் 14 வரை ‘அணிக்கு எழுவர்’ போட்டிகளும் டிசம்பர் 15, 16ஆம் தேதிகளில் ‘சூப்பர் ஃபைவ்’ போட்டிகளும் டிசம்பர் 17, 18ஆம் தேதிகளில் ‘மூன்று ஸ்டார்’ போட்டிகளும் நடைபெறும்.
கபடி வீரர்களுக்கு எடைக் கட்டுப்பாடுகளும் உள்ளன. ஆண்களின் எடை 85 கிலோகிராமுக்கும் பெண்களின் எடை 75 கிலோகிராமுக்கும் உட்பட்டதாக இருக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
ஆண்கள், தமிழர்க்கான விளையாட்டு மட்டுமன்று
தம் உறவினர்கள் கடற்கரையில் கபடி விளையாடுவதைக் கண்டு வளர்ந்த ஆர்த்தி, 22, சிங்கப்பூர் தேசிய பெண்கள் கபடி அணி அமைக்கப்படுவதை டிக்டாக் மூலம் அறிந்தார்.
“கபடி என்பது பெரும்பாலும் ஆண்களே போட்டியிடும் விளையாட்டாக இருப்பதால், என் தைரியத்தைக் காண்பிக்க இதை ஒரு வாய்ப்பாகக் கருதினேன்,” என்றார் அணியின் தாக்குதல் ஆட்டக்காரரான (raider) ஆர்த்தி.
ஆங்கிலோ-சீன தன்னாட்சிப் பள்ளியில் தம் ஆசிரியர் தன்னைக் கபடிக்கு அறிமுகப்படுத்தியதாகக் கூறினார் தாக்குதல் ஆட்டக்காரர் ராஜா ஸ்ரீராம், 21.
“பள்ளியில் மூத்த மாணவர்களும் ஊக்கப்படுத்தினர். ஒரு கபடிச் சமூகமே எங்கள் பள்ளியில் உருவானது,” என்றார் இவர்.
பள்ளியில் தொடங்கி தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் வரை சென்றுள்ள கபடிப் பயணத்துக்கு மெருகூட்டும் தங்கப் பதக்கத்தை இவரது அணி குறிவைக்கிறது.
“போட்டியில் நாங்கள் வெல்ல வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு. கடந்த ஓராண்டாக விளையாட்டாளர்களை நாங்கள் தயார்ப்படுத்தியுள்ளோம். இவ்வளவு சிறப்புவாய்ந்த போட்டியில் பங்கேற்பது எங்களுக்கு இதுவே முதன்முறை. எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன,” என்றார் ஆண்கள் அணிக்கான தலைமைப் பயிற்றுவிப்பாளரும் மத்திய சிங்கப்பூர் கபடிச் சங்கத் தலைமைச் செயலாளருமான முஹம்மது காலித் மரைக்காயர்.
கபடி என்பது தமிழர் பண்பாட்டு விளையாட்டாக இருப்பினும், சிங்கப்பூர் அணியில் மற்ற இனத்தவரும் ஆர்வத்துடன் பங்கேற்பது இன நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழ்கிறது.
ஆண்கள் அணியின் துணைத் தலைவர் ஐடில், விளையாட்டாளர்கள் ரயான், பிரையன், பெண்கள் அணியின் புத்ரி ஆகியோர் அதைப் பறைசாற்றுகின்றனர்.
தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னோட்டமாக, செப்டம்பரில் பினாங்கில் நடந்த கபடிப் போட்டிகளில் வெண்கலம் வென்ற சிங்கப்பூர் அணியினர், இம்முறை தங்கம் வெல்லும் எனச் சிங்கப்பூரின் ஒட்டுமொத்த கபடிச் சமூகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
டிசம்பர் 9, 10ஆம் தேதிகளில் புதிய சூழலுக்குப் பழகும் அணியினர், வியாழக்கிழமை (டிசம்பர் 11) போட்டியில் களமிறங்குவர்.
பதக்கம் வெல்வோம் என்ற மனக்கோட்டையைத் தாங்குவது இனி கோட்டைத் தாண்டும் இவர்களது கால்களே.

