லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது லிவர்பூல் குழு. இதன் காரணமாக அக்குழுவின் நிர்வாகமும் ரசிகர்களும் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இதன் எதிரொலியாக லிவர்பூலின் நிர்வாகியாக இருந்த ஆர்னே ஸ்லோட் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
லிவர்பூல் குழுவின் நிர்வாகியாகப் பதவி ஏற்றதை அடுத்து, முதல் பருவத்திலேயே அக்குழுவுக்குப் பிரிமியர் லீக் பட்டத்தைப் பெற்றுத் தந்தார் ஸ்லோட். ஆனால் அண்மையில் நடந்து முடிந்த பருவத்தில் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால் சனிக்கிழமையன்று (மே 30) அவர் தமது பதவியை இழந்தார்.
இங்கிலாந்தின் உள்நாட்டு கிண்ணப் போட்டிகள் எதையும் வெல்ல முடியாமல் போனதும் லிவர்பூலுக்கு மிகப் பெரிய வீழ்ச்சியாகக் கருதப்பட்டது.
நடந்து முடிந்த பருவத்தில் முதல் இடம்பிடித்து பட்டம் வென்ற ஆர்செனல் குழுவைவிட லிவர்பூல் 25 புள்ளிகள் குறைவாகப் பெற்றுப் பின்தங்கியதால், ஸ்லோட் மீதான அதிருப்தி மேலோங்கியது. இதன் காரணமாகவே அவரைப் பதவிநீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டதாக லிவர்பூல் நிர்வாகம் தெரிவித்தது.

