அர்ஜென்டினா தேசியக் குழுவிலிருந்து ஓய்வுபெறுகிறார் மெஸ்ஸி

அர்ஜென்டினா தேசியக் குழுவிலிருந்து ஓய்வுபெறுகிறார் மெஸ்ஸி

படம்: இபிஏ

07 Oct 2026 - 8:24 pm

2 mins read

பியூனஸ் அயர்ஸ்: அக்டோபர் 6ஆம் தேதியன்று, பியூனஸ் அயர்சில் நடைபெற்ற போட்டியில், முன்னாள் உலக வெற்றியாளர்களான அர்ஜென்டினா அணிக்காக உணர்ச்சிபூர்வமான தமது இறுதி ஆட்டத்தில் பங்கேற்று, லயனல் மெஸ்ஸி தனது 21 ஆண்டுகால அனைத்துலக விளையாட்டு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

வரலாற்றின் மிகச்சிறந்த காற்பந்து வீரராகப் பரவலாகக் கருதப்படும் 39 வயதான மெஸ்ஸி, 85,000 ஆதரவாளர்கள் முன்னிலையில் தமது 126வது அனைத்துலக கோலை அடித்து, பெனின் அணிக்கு எதிராக அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் எளிதாக வெற்றி பெற்றதன் மூலம், தமது விளையாட்டு வாழ்க்கையைக் கச்சிதமாகத் திட்டமிட்டு நிறைவு செய்தார்.

தமது சாதனையை மேலும் நீட்டிக்கும் 208வது அனைத்துலகப் போட்டியில் விளையாடிய மெஸ்ஸி, மூத்த வீரர் நிக்கோலஸ் ஒட்டமெண்டி அடித்த முதல் கோலுக்கு உதவினார்.

நிக்கோ பாஸ் மற்றொரு கோல் அடித்தார்.

“20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மேலாடையை அணிந்து விளையாடியது எனக்குப் பெருமைக்குரிய விஷயமாக இருந்தது,” என்று கூறிய மெஸ்ஸி, இதனைத் தமது “விளையாட்டு வாழ்க்கையின் மிகவும் துயரமான நாள்,” என்றும் குறிப்பிட்டார்.

“இனி இங்கு வராமல் இருப்பது மிகுந்த வேதனையைத் தரும். என் வாழ்நாள் முழுவதும் விளையாடவே நான் விரும்புகிறேன்.

“ஏனெனில், அர்ஜென்டினா தேசிய அணிக்காக விளையாடுவது ஒருவருக்குக் கிடைக்கக்கூடிய மிக அழகான விஷயமாகும்,” என்றார்.

ஆட்டம் முடிவடைந்ததும், விளையாட்டரங்கத்துக்கு மேலே வானத்தில் ஓர் ஆளில்லா வானூர்திக் காட்சி ஒளிர்ந்தது.

அது மெஸ்ஸியின் உருவத்தைக் காண்பித்து, எட்டு முறை பலோன் டி’ஓர் விருது வென்ற அவரது விளையாட்டு வாழ்க்கைக்கு நன்றி தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
காற்பந்துமெஸ்ஸிஅர்ஜென்டினா

தொடர்புடைய செய்திகள்