வாஷிங்டன்: நடப்பு உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரில் பங்கேற்றுவரும் அமெரிக்க அணியை ஊக்குவிக்கும் வகையில், அந்நாட்டு விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அணி கிண்ணத்தைக் கைப்பற்றினால் உறுதியாக ஒரு காற்பந்தை நிலவிற்கு அனுப்பிவைப்போம் என்பதே அந்த அறிவிப்பு.
அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் இணைந்து உலகக் கிண்ணத் தொடரை நடத்திவரும் நிலையில், அனைத்துலகக் காற்பந்துக் கூட்டமைப்பு (ஃபிஃபா) ஏற்கெனவே காற்பந்து ஒன்றை நாசா அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியுள்ளது.
இந்நிலையில், நிலவில் தளம் அமைப்பது குறித்த நாசாவின் திட்டங்களை விளக்கும் நிகழ்ச்சியில் பேசிய அதன் தலைவர் ஜாரெட் ஐசக்மேன், அமெரிக்கா கிண்ணம் வென்றால் அந்தப் பந்தை நிலவிற்கே அனுப்பிவைப்போம் என்று உறுதியளித்துள்ளார்.
கடந்த 1971ஆம் ஆண்டு விண்வெளி வீரர் ஆலன் ஷெப்பர்ட் நிலவில் குழிப்பந்து விளையாடியதை நினைவுகூர்ந்த ஐசக்மேன், அவரைவிட ஒருபடி மேலே சென்று காற்பந்தை நிலவுக்கு அனுப்புவோம் என்று கூறியுள்ளார்.
அறிவியல் கருவிகளுடன் அப்பந்து நிலவிற்கு அனுப்பப்படும் என்றும் பந்தின் எடை குறைவுதான் என்பதால் அதனை எளிதாகச் செய்ய முடியும் என்றும் நாசாவின் திட்ட மேலாளர் கார்லோஸ் கார்சியா கலான் தெரிவித்துள்ளார்.

