கிரோஸ் ஐலட்: நிக்கலஸ் பூரன் சிக்சர் மழை பொழிய, உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 104 ஓட்ட வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை நசுக்கியது.
‘சி’ பிரிவில் இடம்பெற்றுள்ள அவ்விரு அணிகளும் ஏற்கெனவே ‘சூப்பர் 8’ சுற்றுக்கு முன்னேறிவிட்டன. இருப்பினும், அச்சுற்றில் எப்பிரிவில் இடம்பெறுவது என்பதை முடிவுசெய்வதாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 8) நடந்த ஆட்டம் அமைந்தது.
முதலில் பந்தடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி பிராண்டன் கிங்கின் விக்கெட்டைத் தொடக்கத்திலேயே இழந்தது. அவர் ஏழு ஓட்டங்களில் வெளியேறினார்.
ஆயினும், ஜான்சன் சார்ல்ஸ் (47), பூரன் (98), ஷே ஹோப் (25), அணித்தலைவர் ரோவ்மன் பொவெல் (26) ஆகியோர் சிறப்பாக ஆடியதால் வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 218 ஓட்டங்களைக் குவித்தது.
கடினமான இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் 16.4 ஓவர்களிலேயே 114 ஓட்டங்களுக்குச் சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் ஒபெட் மெக்காய் மூன்று விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
கெய்ல் சாதனை முறியடிப்பு
இந்த ஆட்டத்தில் எட்டு சிக்சர்களை விளாசியதன் மூலம், அனைத்துலக டி20 போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த ஆட்டக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் பூரன். அவர் இதுவரை 128 சிக்சர்களை அடித்துள்ளார்.
முன்னதாக, அதிரடித் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 124 சிக்சர்களுடன் அப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.
‘சூப்பர் 8’ சுற்று
மொத்தம் 20 அணிகள் நான்கு பிரிவுகளாக மோதிய முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவுபெற்றுவிட்டன.
தொடர்புடைய செய்திகள்
அடுத்ததாக, ‘சூப்பர் 8’ சுற்றுப் போட்டிகளில் புதன்கிழமை (ஜூன் 19) முதல் தொடங்குகின்றன.
‘சூப்பர் 8’ சுற்றின் முதல் பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இந்தியா, பங்ளாதேஷ் அணிகளும் இரண்டாம் பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவுடன் போட்டிகளை ஏற்று நடத்தும் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்திய அணி வரும் 21ஆம் தேதி ஆப்கானிஸ்தானுடனும், 22ஆம் தேதி பங்ளாதேஷுடனும், 24ஆம் தேதி ஆஸ்திரேலியாவுடனும் மோதவிருக்கிறது.

