லிஸ்பன்: ஃபார்முலா ஒன் கார்ப்பந்தயம் மீண்டும் போர்ச்சுகலுக்குத் திரும்புகிறது.
அங்கு 2027, 2028ஆம் ஆண்டுகளில் எஃப்1 பந்தயம் நடைபெறும்.
ஈராண்டு ஒப்பந்தம் போர்ச்சுகலுக்கு வழங்கப்பட்ட தகவல், ஃபார்முலா ஒன் அமைப்பு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. டச்சு கிராண்ட் ப்ரீ 2026ஆம் ஆண்டு முடிவுக்கு வருகிறது. அதனைத் தொடர்ந்து ஃபார்முலா ஒன்னின் அண்மை முடிவு வந்துள்ளது.
போர்ச்சுகல் இதற்கு முன்னர், 4.6 கிலோமீட்டர் நீளம் கொண்ட அல்காவ் அனைத்துலக கார்ப்பந்தயத்தை 2020, 2021ஆம் ஆண்டுகளில் நடத்தியது. இரண்டு பருவங்களும் கொவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டன.
உலக வெற்றியாளர் பட்டத்தை ஏழு முறை வென்ற லூயிஸ் ஹேமில்டன், 2020ஆம் ஆண்டு, தொழில்முறைப் பந்தயங்களில் அவரின் 92ஆம் வெற்றியைப் பதிவுசெய்தார். அதன்வழி, மைக்கல் ஷுமாக்கரின் முன்னைய சாதனையை அவர் முறியடித்தார். ஹேமில்டன், 2021ஆம் ஆண்டுப் பந்தயத்திலும் வாகை சூடினார்.
பந்தயத்தை மீண்டும் ஏற்றுநடத்த ஒப்புக்கொண்டதற்காகப் போர்ச்சுகல் அரசாங்கத்திற்கும் அந்நாட்டு அதிகாரிகளுக்கும் ஃபார்முலா ஒன் அமைப்பின் தலைமை நிர்வாகி ஸ்டெஃபானோ டொமினிகாலி நன்றி தெரிவித்துக்கொண்டார்.
ஒப்பந்தத்தின் நிதி விவரங்கள் வெளியிடப்படவில்லை.

