இங்கிலாந்தின் புகழ்பெற்ற ‘பிரிமியர் லீக்’ காற்பந்துப் போட்டிகளைக் காண விரும்பும் ரசிகர்களுக்கு நேரடியாகக் காற்பந்து ஆட்டங்களை ஒளிபரப்பும் ‘பிரிமியர் லீக் +’ என்னும் புதிய தளம் சிங்கப்பூரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் சந்தா கட்டணம் $16 முதல் தொடங்கும் என செவ்வாய்க்கிழமையன்று (மே 19) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் உள்ளூர் ஒளிபரப்புப் பங்காளியான ஸ்டார்ஹப் நிறுவனத்துடன் இணைந்து, சிங்கப்பூர் ரசிகர்களுக்காக மூன்று வகையான நீக்குப்போக்குள்ள சந்தா தெரிவுகள் அறிமுகப்படுத்தப்படும்.
$16 மதிப்பிலான 24 மணிநேர அனுமதித் திட்டத்தின்கீழ், குறிப்பிட்ட காலத்துக்கு நேரடி மற்றும் விருப்பத்திற்கேற்ப பார்க்கும் வசதிகள் வழங்கப்படும் (கைப்பேசி மற்றும் மடிக்கணினிகளில் மட்டும்).
மாதாந்திர அனுமதித் திட்டத்தின்கீழ் $44 செலுத்தி எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்துகொள்ளக்கூடிய தொடர் அனுமதி வழங்கப்படும்.
வருடாந்திர அனுமதித் திட்டத்தின்கீழ் சலுகை விலையாக 12 மாதங்களுக்கு $399 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஸ்டார்ஹப் தளத்தில் தனியாகப் பிரிமியர் லீக் போட்டிகளைப் பார்ப்பதற்கு மாதம் $40.74 கட்டணமும் சிங்டெல் டிவி வாடிக்கையாளர்களுக்கு மாதம் $69.90 கட்டணமும் வசூலிக்கப்பட்டு வரும் வேளையில், இந்தப் புதிய தளம் உலகிலேயே முதன்முறையாகச் சிங்கப்பூரில்தான் அறிமுகம் காண்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

