வெலன்சியா: ஸ்பானிய லீக் காற்பந்தாட்டத்தில் ரியால் மட்ரிட்டும் வெலன்சியாவும் ஜனவரி 3ஆம் தேதியன்று மோதின.
இந்த ஆட்டம் வெலன்சியாவில் நடைபெற்றது.
பல ஆட்டங்களில் தோல்வி அடைந்து இரண்டாம் நிலை லீக்கிற்குத் தள்ளப்படும் அபாயத்தை வெலன்சியா எதிர்நோக்குகிறது.
இந்நிலையில், வெலன்சியாவுக்கும் ரியாலுக்கும் இடையிலான போட்டி மிகவும் கடுமையாக இருந்தது.
ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் வெலன்சியாவில் ஹியூகோ டுரோ கோல் போட்டார்.
இடைவேளையின்போது 1-0 எனும் கோல் கணக்கில் வெலன்சியா முன்னிலை வகித்தது.
ஆட்டத்தைச் சமப்படுத்த ரியால் கடுமையாகப் போராடியது.
ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் ரியாலுக்குப் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் அதை கோலாக்கத் தவறினார் பெலிங்ஹம்.
அவர் அனுப்பிய பந்து கோல் கம்பம் மீது பட்டு வெளியேறியது.
ஐந்து நிமிடங்கள் கழித்து, ரியாலின் எம்பாப்பே அனுப்பிய பந்து வலையைத் தொட்டது.
ஆனால் ஆஃப்சைட் காரணமாக அந்த கோல் நிராகரிக்கப்பட்டது.
ஆட்டத்தின் 79வது நிமிடத்தில் வெலன்சியாவின் கோல்காப்பாளரை அறைந்ததற்காக ரியாலின் வினிசியஸ் ஜூனியருக்குச் சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
இதனால் அவர் திடலை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டு வெறும் பத்து ஆட்டக்காரர்களுடன் ரியால் ஆட்டத்தைத் தொடர்ந்தது.
இருப்பினும், மனந்தளராது விளையாடிய ரியாலுக்குக் கைமேல் பலன் கிடைத்தது.
மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய மோட்ரிச், ஆட்டம் முடிய ஐந்து நிமிடங்கள் இருந்தபோது கோல் போட்டு ஆட்டத்தைச் சமன்செய்தார்.
ஆட்டத்தின்போது ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக விரயமான நேரத்தை ஈடுகட்டும் வகையில் 90 நிமிடங்களுக்குப் பிறகு கூடுதல் நேரம் விளையாடப்பட்டது.
அவ்வாறு வழங்கப்பட்ட நேரத்தின் ஏழாவது நிமிடத்தில் ரியாலின் வெற்றி கோலை பெல்லிங்ஹம் போட்டார்.
2-1 எனும் கோல் கணக்கில் ரியால் வாகை சூடியது.
இந்த வெற்றியின் மூலம் 43 புள்ளிகளுடன் லீக் பட்டியலில் ரியால் முன்னிலை வகிக்கிறது.