பேங்காக்: தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் (சீ கேம்ஸ்) சீனத் தற்காப்புக் கலையான வுஷுவின் சண்டா (sanda) பிரிவு ஆட்டத்தில் பதக்கம் வென்றுள்ள முதல் சிங்கப்பூர் வீராங்கனையாக சித்தி கதிஜா ஷாரெம் விளங்குகிறார்.
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) நடைபெற்ற 60 கிலோ பிரிவினருக்கான ஆட்டத்தில் சித்தி கதிஜா வெண்கலப் பதக்கம் வென்றார்.
அரையிறுதிச் சுற்றில் மியன்மாரின் ஹின் நு வாவிடம் 2-0 எனும் ஆட்டக்கணக்கில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து, சித்தி கதிஜா, 24, மூன்றாவது நிலையில் வந்தார்.
முன்னதாக, காலிறுதிச் சுற்றில் லாவோசின் புலிசவோங் சுடாலத்தை 2-0 எனும் ஆட்டக்கணக்கில் தோற்கடித்ததைத் தொடர்ந்து, பதக்க வாய்ப்பை இவர் உறுதி செய்துகொண்டார்.
2015 தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளை சிங்கப்பூர் ஏற்று நடத்தியபோது, சண்டா வகை ஆட்டத்தில் ஐவன் லிம் கடைசியாக வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
வுஷு, இருவகை ஆட்டங்களைக் கொண்டுள்ளது. தாவ்லு என்பது முன்கூட்டியே வடிவமைக்கப்பட்ட பயிற்சிகளை (கலை வடிவங்களை) நிகழ்த்துவதாகும். அதேசமயம் சண்டா என்பது முழு தொடர்பு சண்டைக் கலையாகும்.
தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சித்தி கதிஜா பதக்கம் வென்றிருப்பது இது முதன்முறையன்று.
முன்னாள் சிலாட் வீராங்கனையான இவர், 2022 ஹனோய் விளையாட்டுப் போட்டிகளின்போது எஃப் பிரிவில் (70-75 கிலோ) வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

