தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் சிங்கப்பூரின் மார்க் லூயிஸ்.
அவர் 20.72 வினாடியில் பந்தயத்தை முடித்தார். இது புதிய தேசியச் சாதனையாகும்.
தங்கப் பதக்கத்தைத் தாய்லாந்தின் புரிப்போல் பூன்சன் வென்றார். அவர் பந்தயத்தை 20.07 வினாடியில் முடித்தார். மூன்றாவது இடத்தில் மலேசியாவின் டானிஷ் இப்திக்கர் (20.73) வந்தார்.
பேங்காக்கின் சுப்பாச்சலாசாய் தேசிய விளையாட்டரங்கில் பந்தயம் சனிக்கிழமை (டிசம்பர் 13) இரவு நடந்தது.
இரண்டு நாள்களுக்கு முன்னர் நடந்த ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மார்க் லூயிஸ் பதக்கம் வெல்லத் தவறினார்.
இதற்கு முன்னர், ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹம்கா அபிஃக், சிங்கப்பூருக்காக வெள்ளிப் பதக்கம் வென்று தந்தார். அது, 1993ஆம் ஆண்டில் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் நடந்தது.

