கனடாவைச் சேர்ந்த 24 வயது வீராங்கனை லெய்லா ஃபெர்னாண்டஸ் சிங்கப்பூர் டென்னிஸ் பொதுவிருதுப் போட்டியில் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
உலகத் தரவரிசையில் 31வது இடத்தில் உள்ள லெய்லா, ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) நடைபெற்ற இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவின் தாலியா கிப்சனை எதிர்கொண்டார்.
அந்த ஆட்டத்தில் 7-5, 6-0 என்ற நேர் செட் கணக்கில் லெய்லா மிக எளிதாக வெற்றி பெற்றார்.
‘வைல்டு கார்டு’ நுழைவு மூலம் தாமதமாகச் சிங்கப்பூர் டென்னிஸ் பொதுவிருதுப் போட்டியில் பங்கேற்று தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் லெய்லா.
நேர் செட்களில் வென்று இருந்தாலும் அவர் தனது பட்டத்திற்கு ஒரு மணி 38 நிமிடம் போராட வேண்டியிருந்தது.
இதன் வெற்றியின் மூலம் லெய்லா இந்த ஆண்டின் தனது முதல் ‘டபிள்யூடிஏ 500’ (WTA 500) பட்டத்தைக் கைப்பற்றினார்.
2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு அவர் வெல்லும் முதல் பட்டம் இதுவாகும்.
இந்த வெற்றி தனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த லெய்லா, ஆட்டத்தின்போது பந்தில் மட்டுமே முழுக் கவனம் செலுத்தியதே வெற்றிக்குக் காரணம் என்றார்.
மேலும், வெற்றிப் பரிசாகக் கிடைத்த தொகையைக் கொண்டு, தனக்கு விருப்பமான காலணிகள் வாங்கவும், உடற்பிடிப்பு செய்யவும் மரினா பே சேண்ட்ஸ் ஹோட்டலுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் லெய்லா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சிங்கப்பூர் டென்னிஸ் பொதுவிருதுப் போட்டியில் பட்டம் வென்ற லெய்லாவுக்குப் பரிசுத்தொகையாக 185,500 அமெரிக்க டாலர் (S$237,100) கிடைத்துள்ளது.
இறுதிச்சுற்றில் தோல்வியடைந்த 22 வயது தாலியா கிப்சன், உலகத் தரவரிசையில் 63வது இடத்தில் உள்ளார்.
காலாங் ஓசிபிசி அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் தோல்வியுற்றாலும், அவர் முதலில் லெய்லாவுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தனது டென்னிஸ் வாழ்க்கையில் முதன்முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய தாலியா, “இந்த அனுபவம் எனக்குத் தன்னம்பிக்கையைக் கொடுத்துள்ளது, தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடுவேன்,” என்று நம்பிக்கையுடன் கூறினார்.
