பேங்காக்: தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளின் நீச்சல் பந்தயத்தில் சிங்கப்பூருக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார் மிக்கெல் லீ.
ஆண்களுக்கான 100 மீட்டர் எதேச்சைபாணி நீச்சலை 48.65 நொடிகளில் முடித்து அவர் வெற்றிபெற்றார்.
சிங்கப்பூரின் குவா செங் வென், வியட்னாமின் டிரான் வென் குயென் குவோக் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளினார் லீ.
22 வயது லீ தமது சொந்த சாதனையை முறியடித்தார். இதற்குமுன் 100 மீட்டர் எதேச்சைபாணி நீச்சலுக்கு அவர் எடுத்துக்கொண்ட நேரம் 49.10 நொடி.
அடுத்து நடைபெற்ற பெண்களுக்கான 50 மீட்டர் நெஞ்சு நீச்சல் போட்டியில் லெட்டிஷியா சிம் சிங்கப்பூருக்கு அடுத்த தங்கத்தைச் சேர்த்தார். அவர் எடுத்துக்கொண்ட நேரம் 31.03 நொடி.
அவர் ஜெஞ்சிரா சிரிசார்ட், தாய்லாந்தின் சாவானீ பூனாம்ஃபா, மலேசியாவின் ஃபீ ஜிங் என் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளினார்.
ஆண்களுக்கான 200 மீட்டர் கலப்புபாணி நீச்சலில் வியட்னாமின் டிரான் ஹங் குயென் மீண்டும் வெற்றி வாகை சூடினார். 2019ஆம் ஆண்டிலிருந்து தனிநபர் கலப்புபாணி நீச்சலில் ஆதிக்கம் செலுத்திவரும் குயென் இம்முறை எடுத்துக்கொண்ட நேரம் 2 நிமிடம் 0211 நொடி.
சிங்கப்பூரின் மேக்சிமிலியன் ஆங் ஐந்தாவது இடத்திலும் ஸாக்கரி டான் ஏழாவது இடத்திலும் வந்தனர்.

