குடும்பத்தினருடன் எஃப்1 கார்ப் பந்தயத்தைக் கண்டுகளித்த சிங்கப்பூரர்கள்

குடும்பத்தினருடன் எஃப்1 கார்ப் பந்தயத்தைக் கண்டுகளித்த சிங்கப்பூரர்கள்

1 of 2
படம்: வினோத் கருப்பையா
படம்: ராய்ட்டர்ஸ்

10 Oct 2026 - 8:53 pm

2 mins read

சிங்கப்பூரில் விறுவிறுப்பாக நடந்து வரும் எஃப்1 இரவுநேர கார்ப் பந்தயம் இளையர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பினரையும் ஈர்த்துள்ளது. அந்தப் பட்டியலில் குடும்பங்களும் இணைந்துள்ளன.

பெற்றோர் பலர், ஃபார்மூலா ஒன் கார்ப் பந்தயத்தைப் பற்றி தங்களுடைய பிள்ளைகளும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பியதால் பந்தயத்தைக் காண அவர்களை அழைத்து வந்தனர். அவர்களில் சிலரிடம் தமிழ் முரசு பேசியது.

“நான் பலமுறை சிங்கப்பூர் இரவுநேர கார்ப் பந்தயத்தை நேரில் கண்டு ரசித்துள்ளேன். கடந்த சில ஆண்டுகளாக என் மகளுக்கும் கார்ப் பந்தயத்தின்மீது ஈர்ப்பு வந்தது. அதனால் இம்முறை அவரையும் போட்டியைக் காண அழைத்து வந்தேன்,” என்றார் நாதன், 60.

“முதன்முறையாக எஃப்1 கார்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. எனக்கு மிகவும் பிடித்த அணி வில்லியம்ஸ். இன்று அவர்கள் புள்ளிகள் ஏதும் எடுக்காதது வருத்தம்தான். ஆனால் தந்தையுடன் பந்தயத்திற்கு வந்த அனுபவம் மறக்க முடியாத ஒன்றாக இப்போது உள்ளது,” என்றார் வேனியா, 27.

“ஆஸ்திரேலியாவில் வசிக்கும் என்னுடைய தம்பி, எனது பிறந்தநாள் பரிசாக எனக்கு இரண்டு ‘விஐபி’ நுழைவுச்சீட்டுகளை வாங்கிக் கொடுத்தார். நானும் என் மகனும் வந்துள்ளோம்,” என்றார் அசோக்.

“பத்து வயது மகன் குருவுக்கு ஆரஞ்சு நிறம் பிடிக்கும் என்பதால் அவர் மெக்லேரன் அணியைத் தேர்ந்தெடுத்துள்ளார். எனக்கு ரெட் புல் அணிதான் பிடிக்கும். ஆனால், மகனுக்காக இன்று மெக்லேரன் சட்டையில் வந்துள்ளேன்,” என்று திரு அசோக் தெரிவித்தார்.

நுழைவுச்சீட்டு கிடைக்காவிட்டாலும் பந்தயத்தின் மீதான ஆர்வத்தால் சிவகுமார் தனது இரண்டு பிள்ளைகளுடன் மரினா ஸ்குவேரிலிருந்து குறும்பந்தயத்தைப் பார்த்தார்.

“சிங்கப்பூர் பந்தயத்தை ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டப்பன் வெல்ல வேண்டும். சிங்கப்பூரில் இப்போது வெப்பமும் புகைமூட்டமும் நிலவுவதால் அது வீரர்களுக்குக் கடுமையான சவாலைக் கொடுக்கலாம்,” என்றார் அவர்.

“என் பதின்ம வயது பிள்ளைகளான டீப்பிகா, 16, டனே‌ஸ், 14, இருவருக்கும் கார்ப் பந்தயம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது,” என்றார் சிவகுமார், 42.

கூடுதல் செய்தி: காமாட்சி சந்திரசேகர்
குறிப்புச் சொற்கள்