பேங்காக்: ‘சீ’ விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளுக்குப் பிறகு, சிங்கப்பூரின் பீட்டர் கில்கிறிஸ்ட், வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) அன்று நடந்த பதற்றமான இறுதிப் போட்டியில் மியன்மாரின் பவுக் சாவை 3-0 (101-48, 102-59, 100-40) என்ற ஆட்டக்கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து பில்லியர்ட்ஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடத்திற்குத் திரும்பினார்.
தனது 10வது ‘சீ’ விளையாட்டுகளின் இந்தப் போட்டியில் தொடர்ச்சியாக எட்டாவது முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற கில்கிறிஸ்ட், 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் 66 வயதான பவுக் சாவிடம் தங்கத்தை இழந்தார்.
மியன்மார் வீரர் ஏற்கெனவே காலிறுதிப் போட்டியில் மற்றொரு சிங்கப்பூரரான கார்த்திக் ராமசாமியை 3-2 என்ற ஆட்டக்கணக்கில் தோற்கடித்தார். அரையிறுதியில் தாய்லாந்தின் யுட்டாபாப் பாக்போஜை வெற்றி கண்டார்.
மறுபுறம், கில்கிறிஸ்ட் கடைசி எட்டுப் போட்டிகளில் இந்தோனீசியாவின் மார்லாண்டோ சிஹோம்பிங்கை 3-0 என்ற ஆட்டக்கணக்கில் வீழ்த்தினார். பின்னர் பேங்காக்கின் தண்டர் டோமில் நடந்த அரையிறுதியில் தாய்லாந்தின் பிரப்ருத் சைதனஸ்குனை 3-2 என்ற ஆட்டக்கணக்கில் வென்றார்.
முன்னதாக, மகளிர் ஸ்னூக்கர் 6-ரெட் அணி அரையிறுதியில் இந்தோனீசியாவின் எமிலியா ரஹ்மான்டா, அனபெல்லா யோஹானாவிடம் 3-0 (45-24, 69-16, 35-31) என்ற கணக்கில் தோல்வியடைந்த சிங்கப்பூரின் சார்லின் சாய், ஆட்ரி சுவா ஆகியோர் மலேசியாவுடன் கூட்டு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றனர். டிசம்பர் 13ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தோனீசிய அணி தாய்லாந்தை எதிர்கொள்ளும்.

