கைகால் இல்லாத கனடிய ஓட்டப்பந்தய வீரர் கிறிஸ்டஃபர் கோக், இவ்வாண்டின் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் அரை, முழு ஆகிய நெடுந்தொலைவோட்டங்கள் இரண்டிலும் பங்கேற்றார்.
சனிக்கிழமை (டிசம்பர் 6) நடந்த அரை நெடுந்தொலைவோட்டத்தை (21.1 கிலோமீட்டர்) அவர் தன் சறுக்குப் பலகையில் (longboard) 2 மணி 52 நிமிடம் 32 வினாடி எனும் நேரத்தில் முடித்தார். அவரது காதலி கார்லி தன் முதல் அரை நெடுந்தொலைவோட்டத்தில் பங்கேற்றார்.
2016ல் ஓர் ஓட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் கிறிஸ்டஃபரைப் பங்கேற்க அனுமதிக்காதபோது, தன்னால் பாதுகாப்பாக, விரைவாக ஓட்டப்பந்தயத்தை முடிக்க முடியும் என்பதை நிரூபிக்கவேண்டும் என்ற வைராக்கியம் அவரை ஆட்கொண்டது.
அதன்பின், பல்வேறு ஓட்டப்பந்தயங்களில் ஒவ்வொன்றாகப் பங்கேற்று அசத்தினார். இன்று அவர் மற்ற உடற்குறையுள்ளோருக்குக் குரலாக, தன்முனைப்புப் பேச்சாளராக, விவசாயியாக, பன்முகங்கள் கொண்டுள்ளார்.
“ஒவ்வொரு ஓட்டப்பந்தயத்துக்கும் நான் சிறப்பு அனுமதி பெறவேண்டியுள்ளது. ஒரு நாள், என்னைப் போலச் சறுக்குப் பலகையில் நெடுந்தொலைவோட்டத்தில் பங்கேற்போர் ஒரு மின்னஞ்சல் அனுப்பினாலேயே அனுமதி பெறும் நிலை ஏற்படவேண்டும் என்பதே என் கனவு,” என்றார் கிறிஸ்டோஃபர்.
செயற்கைக் காலுடன் ஓடிய சிங்கப்பூரர் லியூ டெக் குவா, உடற்குறையுள்ளோருக்கான ஆசியான் விளையாட்டுகளில் 2015ல் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து உள்ளார். 2004ல் சாலை விபத்தில் அவர் தன் காலை இழந்தார். “செயற்கைக் காலுடன் நடக்கப் பழகவே ஓராண்டுகாலம் எடுத்தது. அதனைத் தொடர்ந்து நெடுங்காலத்துக்குப் பிறகே ஓட்டப்பந்தயத்துக்கு முன்னேறியுள்ளேன். இதுவரை நான் இவ்வளவு தூரம் ஓடியதே இல்லை,” என்றார் டெக் குவா.
‘சமமான வாய்ப்புகள் அவசியம்’
சிறப்புத் தேவைகள் கொண்ட பங்கேற்பாளருடன் இணைந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் ஓடினார் ‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்’ வங்கியின் வர்த்தக மாற்றத் துறை இணை இயக்குநர் வீணா மிஸ்ரா. “இந்நிலையை எட்ட பத்து வாரங்கள் தேவைப்பட்டன. பந்தயத்தை முடிப்பதே முக்கியம்; எவ்வளவு நேரத்தில் முடிக்கிறோம் என்பதல்ல,” என்றார் வீணா.
தன் சக ஊழியர்கள், சிறப்புத் தேவைகள் கொண்டவர்களுடன் பழகுவதற்காக இவ்வாண்டு கிட்டத்தட்ட 20 நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளார் வீணா. அதில் ஒன்று, இம்பேக்ட்@ஹோங் லிம் உடற்பயிற்சிக்கூடத்தில் சிறப்புத் தேவைகள் கொண்டவர்களுக்கான விளையாட்டுத் தினம். “அவர்கள் எவ்வளவு முயற்சிசெய்கிறார்கள் எனத் தெரிகிறது. ஒவ்வொருவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்,” என்றார் வீணா.
தொடர்புடைய செய்திகள்
போட்டித்தன்மைமிகுந்த ஓட்டப்பந்தயம்
தேசிய சேவையாளர் பிரணவ் ஸ்ரீதர், 20, ஆண்களுக்கான தேசியப் போட்டியில் ஐந்தாம் இடத்தைப் பிடித்து $800 வென்றார். அவர் எடுத்துக்கொண்ட நேரம் 1 மணி 17 நிமிடம் 12 வினாடி. இரு மாதங்களாகவே காலில் வலியுடன் போராடிவந்தாலும் அவர் சிறப்பாக ஓடி இந்நிலையைப் பெற்றார்.
ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தில் படித்தபோது ‘ஏ’ பிரிவு பள்ளித் திடல்தடப் போட்டிகளில் வெற்றியாளராக வந்துள்ள பிரணவ், 2023லிருந்து ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் அரை நெடுந்தொலைவோட்டத்தில் பங்கேற்று வந்துள்ளார். அவர் தன் வயதுப் பிரிவில் (U-20) 2023ல் முதல் நிலையிலும் 2024ல் இரண்டாம் நிலையிலும் வந்தார்.
அண்மைய ‘கார்மின்’ அரை நெடுந்தொலைவோட்டத்தை 1 மணி 15 நிமிடம் 58 வினாடி நேரத்தில் முடித்து தன் சொந்த சாதனையை முறியடித்தார் பிரணவ். இவ்வாண்டின் ‘பொக்காரி ஸ்வெட்’ போட்டிகளில் 2.4 கிலோமீட்டரை 6 நிமிடம் 58 வினாடி நேரத்தில் முடித்து பல பாராட்டுகளைப் பெற்றார்.
எதிர்காலத்தில் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் நாட்டைப் பிரதிநிதிப்பதே அவரது கனவு.
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் அரை நெடுந்தொலைவோட்டத்தில் தேசிய வெற்றியாளர்களாக வாகைசூடினர் தேசிய ஓட்டப்பந்தய வீரர்கள் சோ ருவீ யோங் (ஆண்கள் பிரிவு), நிக்கோல் லோ (பெண்கள் பிரிவு).
1 மணி 14 நிமிடம் 58 வினாடிகளில் ஓட்டத்தை முடித்தார் சோ. 1 மணி 23 நிமிடம் 45 வினாடிகளில் ஓட்டத்தை முடித்தார் நிக்கோல் லோ.
அசாதாரண இதயத் துடிப்பால் சோவின் தென்கிழக்காசிய விளையாட்டுகள் வாய்ப்பு ஊசலாடும் வேளையில், அரை, முழு நெடுந்தொலைவோட்டங்கள் இரண்டிலும் பங்குபெறுகிறார் சோ. “நான் இதை 63 கிலோமீட்டர் ஓட்டமாகவே பார்க்கிறேன்,” என்றார் சோ.
19-20 கிலோமீட்டர் வரை முன்னணியில் இல்லாத சோ, இறுதிக் கட்டத்தில் விரைந்து முதல் நிலையைக் கைப்பற்றினார். தன் இதயத் துடிப்பு அளவுக்கதிகமாக உயரக்கூடாது என்பதால் சற்று பாதுகாப்பாகவே ஓடியதாகக் கூறினார் சோ.
எதிர்காலத்தில் 88 கிலோமீட்டர் தூரம் போன்ற ‘அல்ட்ரா’ நெடுந்தொலைவோட்டங்களில் ஓட விரும்புவதாக அவர் கூறினார்.
அனைத்துலக அளவில் (போட்டியில்லா பிரிவில்) தென்னாப்பிரிக்காவின் டிசெட்சோ சபாட்டா 1 மணி 11 நிமிடம் 1 வினாடி நேரத்தில் ஆக விரைவாக ஓட்டத்தை முடித்தார். அவருக்குப் பின்னால் இரண்டாம் நிலையில் சிங்கப்பூரின் ஐவன் டேங் 1 மணி 14 நிமிடம் 16 வினாடி நேரத்தில் முடித்தார்.
முழு நெடுந்தொலைவோட்டம் டிசம்பர் 7ஆம் தேதி அதிகாலை நடைபெறுகிறது. அரை நெடுந்தொலைவோட்டமும் முழு நெடுந்தொலைவோட்டமும் வெவ்வேறு நாள்களில் நடைபெறுவது இதுவே முதன்முறை.

