ஆண்டாண்டு காலமாகத் தென்
கிழக்காசியக் காற்பந்தில் தலை
நிமிர முடியாமல் தவித்த லாவோஸ், தற்போது கிண்ணங்களைக் கைப்பற்றும் கனவுகளுடன் முனைப்புடன் உள்ளது. இந்த மாற்றத்துக்கும் முன்னேற்றத்துக்கும் சிங்கப்பூரின் முன்னாள் காற்பந்து நட்சத்திரங்
களான வி. சுந்தரமூர்த்தியும்
வி. செல்வராஜும் முக்கிய காரணம். 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து லாவோஸ் காற்பந்துச் சம்மேளனத்தின் தொழில்நுட்ப இயக்குநராக சுந்தரம் பதவி வகித்து வருகிறார். லாவோசின் உயர்மட்ட இளையர் காற்பந்துக் குழுக்களுக்கு செல்வராஜ் தலைமைப் பயிற்றுவிப்பாளராக உள்ளார்.
இருவரின் பங்களிப்பும் வியூகங்களும் ஏற்படுத்தியுள்ள தாக்கம் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஆசியான் காற்பந்துச் சம்மேளனத்தின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான காற்பந்துப் போட்டியில்
தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.
வழக்கமாக முதல் சுற்றிலேயே லாவோஸ் படுதோல்வி அடைந்து போட்டியிலிருந்து வெளியேறி
விடும். ஆனால், இம்முறை அது முத்திரை பதித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
முதல் சுற்றில் அது சிங்கப்பூரை 3-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது. மலேசியாவை 1-0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது.
கிண்ணத்தை ஐந்து முறை ஏந்திய ஜாம்பவானான தாய்லாந்தை லாவோஸ் அரையிறுதியில் 2-0 எனும் கோல் கணக்கில் ஓரங்கட்டி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. யாரும் நினைத்துக்கூட பார்க்காத வகையில் லாவோஸ் இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றது.
இறுதி ஆட்டத்தில் மலேசியாவிடம் அது 2-0 எனும் கோல் கணக்கில் தோற்றபோதிலும் காற்பந்தில் இனி நாங்கள் கத்துக்
குட்டிகள் அல்ல என்று லாவோஸ் ஆட்டக்காரர்கள் நிரூபித்துவிட்டனர். இந்தச் சாதனைக்கு அதிர்ஷ்டம் காரணம் அல்ல என்றும் அயராத உழைப்புதான் காரணம் என்றும் தொலைபேசி மூலம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சுந்தரம் தெரிவித்தார். அவரும் செல்வராஜும் கடந்த சில ஆண்டுகளாக லாவோஸ் இளையர்களுக்குப் பயிற்சி அளித்து வருகின்றனர்.

