ரியாத்: காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடும் சவூதி அரேபியக் குழுவான அல் நசர், சவூதி புரோ லீக் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
லீக் பருவத்தின் கடைசி ஆட்டத்தில் டமாக் குழுவை 4-1 எனும் கோல் கணக்கில் வென்று பட்டத்தை வென்றது அல் நசர். ஆட்டத்தில் அல் நசரின் மற்ற இரண்டு கோல்களை சாடியோ மானே, கிங்ஸ்லி கோமன் ஆகியோர் போட்டனர்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து லீக் பட்டியலில் அல் நசர், 86 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. 84 புள்ளிகளுடன் அல் ஹிலால் இரண்டாவது இடத்தில் முடித்தது.
அல் ஃபேஹா குழுவை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றபோதும் அல் ஹிலாலால் இரண்டாவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.
2019ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக லீக் விருதை வென்றிருக்கிறது அல் நசர். அதோடு 41 வயது ரொனால்டோ, சவூதி அரேபியாவில் முதன்முறையாக லீக் விருதை வென்றிருக்கிறார். அவர் 2022ஆம் ஆண்டில் அல் நசரில் சேர்ந்தார்.
ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் அல் நசரை முன்னுக்கு அனுப்பினார் மானே. பிறகு 52வது நிமிடத்தில் கோமன் கோல் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினார்.
பிறகு 58வது நிமிடத்தில் டமாக்கின் மொர்லாயே சில்லா பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார்.
அதன் பின்னர் இரண்டு கோல்களைப் போட்டு அல் நசரின் வெற்றியை உறுதிப்படுத்தினார் போர்ச்சுகீசிய நட்சத்திரமான ரொனால்டோ.

