சாதித்த வெர்ஸ்டாப்பன்; சிங்கப்பூருக்குப் பாராட்டு

சாதித்த வெர்ஸ்டாப்பன்; சிங்கப்பூருக்குப் பாராட்டு

1 of 3
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: லாரன்ஸ் வோங்/எக்ஸ்
படம்: ஏஎஃப்பி

12 Oct 2026 - 12:42 pm

3 mins read

சிங்கப்பூரில் ஒன்பதுமுறை போட்டியிட்டும் ஒருமுறைகூட வெற்றியாளர் கிண்ணத்தைக் கைப்பற்றவில்லை என்ற ஏக்கம் இனி மேக்ஸ் வெர்ஸ்டாப்பனுக்கு இருக்காது.

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) இரவு சிங்கப்பூரின் மரினா பே ஸ்திரீட் பந்தயச் சுற்றில் முதன்முறையாகக் கிண்ணத்தை வென்று அவர் சாதனை படைத்துள்ளார்.

ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின்கீழ் தற்போது செயல்பாட்டில் உள்ள அனைத்துப் பந்தயச் சுற்றுகளிலும் வெர்ஸ்டாப்பன் வெற்றிபெற்றுள்ளார்.

இந்தப் பருவத்தின் தொடக்கத்தில் தடுமாறிய வெர்ஸ்டாப்பன் இப்போது மீண்டும் தமது வலிமையைப் பந்தயத் திடலில் காட்டத் தொடங்கியுள்ளார்.

பாக்கூவில் நடந்த பந்தயத்தை நூலிழையில் தவறவிட்ட வெர்ஸ்டாப்பன், மலேசியாவில் ஆதிக்கம் செலுத்தினார். அவரது ஆதிக்கம் சிங்கப்பூரிலும் தொடர்ந்தது.

ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் 250வது முறையாகப் போட்டியிட்ட வெர்ஸ்டாப்பனுக்கு சிங்கப்பூரில் கிடைத்த வெற்றி இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

ஹேமில்டன் சோகம்

ஃபெராரியின் லூயிஸ் ஹேமில்டனுக்கு எப்போதும்போல் சிங்கப்பூரில் பேராதரவு இருந்தது.

பந்தயத்தை மூன்றாவது இடத்தில் தொடங்கிய ஹேமில்டன் வெற்றிக்காகப் போராடுவார் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

பந்தயத்தின்போது ஹேமில்டன் காரின் சக்கரங்களை இரண்டாவது முறையாக மாற்ற மறுத்தார். இறுதி நேரத்தில் காரின் வேகத்திற்குச் சக்கரங்கள் ஒத்துழைக்காததால் அவர் மூன்றாவது இடத்திலிருந்து ஆறாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

அடுத்து அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் நடக்கும் பந்தயத்தில் இழந்ததை ஈடுகட்டப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மெர்சிடிஸ் ஆறுதல்

பந்தயத்தைக் கடைசியாகத் தொடங்கிய மெர்சிடிஸ் அணியின் ஜார்ஜ் ரசல் ஒன்பதாவது இடத்தில் முடித்து இரண்டு புள்ளிகளைப் பெற்று ஆறுதல் அடைந்தார்.

அதேபோல், மெர்சிடிஸ் அணியின் கிமி அன்டோனெல்லி தனக்கு கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார்.

இருபது வயதான அன்டோனெல்லி, அமெரிக்கப் பந்தயத்திலும் சில புள்ளிகளைப் பெற்றுவிட்டால் இந்தப் பருவத்திற்கான வெற்றியாளர் கிண்ணத்தை வெல்வது உறுதியாகிவிடும்.

சிங்கப்பூருக்குப் பாராட்டு

பயிற்சிச் சுற்று, குறும்பந்தயம், தகுதிச்சுற்று, பந்தயம் என வார இறுதியின் மூன்று நாள்களில் மட்டும் 301,295 ரசிகர்கள் திரண்டனர்.

உள்ளூரில் மட்டுமில்லாது மலேசியா, இந்தியா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, இந்தோனீசியா எனப் பல்வேறு நாடுகளிலிருந்து ரசிகர்கள் சிங்கப்பூர் கார்ப் பந்தயத்தைக் காண மரினா பே ஸ்திரீட் பந்தயச் சுற்றில் குவிந்திருந்தனர்.

திரைப்பட நடிகர்கள், அரசியல் தலைவர்கள், பாடகர்கள், காற்பந்து வீரர்கள் எனப் பல பிரபலங்களும் சிங்கப்பூர் கார்ப் பந்தயத்தை நேரில் கண்டுகளித்தனர்.

சீரான வரிசைகள், மேம்பட்ட பாதுகாப்பு, சிறப்பான போக்குவரத்து ஏற்பாடு, பிடித்தமான இசை நிகழ்ச்சிகள் எனப் பல நிகழ்வுகள் சிங்கப்பூர் பந்தயத்தை வெற்றிகரமான பந்தயமாகத் தொடர வைக்கிறது. சிங்கப்பூரின் சரியான திட்டமிடலால் தங்களுக்கு நல்ல பந்தய அனுபவம் கிடைத்ததாகவும் ரசிகர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

தொண்டூழியர்கள், மாணவர்கள், இளையர்கள், மூத்தோர், வெளிநாட்டு ஊழியர்கள், அமைப்புகள் எனப் பலரின் பங்கும் பந்தயத்தை வெற்றிகரமாக நடத்த உதவியதைக் காணமுடிந்தது.

பிரதமர் வோங் மகிழ்ச்சி

பிரதமர் லாரன்ஸ் வோங்கும் பந்தயத்தை நேரில் கண்டு ரசித்தார். அதுகுறித்து தமது இன்ஸ்டகிராம் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.

“சிங்கப்பூரில் முதல் வெற்றியைப் பதிவு செய்த வெர்ஸ்டாப்பனுக்கு வாழ்த்துகள். விறுவிறுப்பான போட்டியைக் கடந்து நண்பர்களையும் அரசியல் தலைவர்களையும் சந்திக்கச் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ ஓர் அருமையான வாய்ப்பாக அமைந்தது. விளையாட்டு வீரர்கள் உட்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்துவரும் சிங்கப்பூரர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று திரு வோங் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்